கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது அவர் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுவதாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மேலும், ஜிப்மர் மருத்துவர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர், இரண்டு பிரேதப் பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞராக இருந்து கொண்டு இதுபோல தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார். மாணவியின் மரண விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு அரசுக்கும், சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். தவறான தகவலை பரப்பும் சமூக ஊடகங்கள், யூ-ட்யூப் சேனல்கள், நபர்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவியின் மரணத்திற்கு காரணமான எதையும் விடாமல் விசாரணை மற்றும் சம்பவங்களை வெளிச்சத்திற்கு அரசு கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுக்கும், சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் பாராட்டு தெரிவிக்கின்ற அதேவேளையில், விசாரணையை முடித்து இறுதி அறிக்கை விரைந்து தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும், புகார்தாரரே குற்றம் சாட்டப்பட்டவராக மாறுகின்ற சம்பவங்களையும் இந்த நீதிமன்றம் தனது அனுபவத்தில் பார்த்துள்ளது என்றும், விசாரணை முடிவடையாத நிலையில் அது போன்ற கட்டத்தை இன்னும் விசாரணை குழு எட்டவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள விசாரணை இடைக்கால அறிக்கையில், பல்வேறு சூழல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; தற்போதைய நிலையில் அவற்றை வெளியிட முடியாது என்றும் உத்தரவில் விளக்கம் அளித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/JBwQVLH
via IFTTT
0 Comments