இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன.
ஜனவரி 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரே படகில் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்கள் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துக்கப்பல் மோதியதாகவும், இதில் படகு கவிழ்ந்ததாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் காணாமல்போன 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
4 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இலங்கையில் உள்ள மீனவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவந்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் வருகிற 24ஆம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மீனவர்களும் ஒன்றிணைந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர், இறந்த மீனவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுதான் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், இன்று யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் 4 தமிழக மீனவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை நீதிபதிகள் முன்பு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்த தகவல் இந்தியா தரப்பில் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை எனவும், கடற்படைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறியிருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/399hyES
via IFTTT
0 Comments