'கொள்ளைச் சம்பவத்தை மறைக்க கொலை முயற்சி' - திருப்பத்தூரில் சிக்கிய கும்பல்!

LATEST NEWS

500/recent/ticker-posts

'கொள்ளைச் சம்பவத்தை மறைக்க கொலை முயற்சி' - திருப்பத்தூரில் சிக்கிய கும்பல்!

தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை மறைக்க, கொலைத் திட்டம் திட்டிய ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஒரு குற்றத்தை மறைப்பதற்காக கொலை செய்யத் துணிந்த கும்பல் ஒன்று, கூண்டோடு காவல்துறையிடம் சிக்கிய சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. வாணியம்பாடியில் உள்ள பெரியபேட்டையைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர், பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரா மற்றும் சோனியா ஆகியோர் பணிபுரிந்தனர். அங்கு கொண்டுவரப்படும் நகை மற்றும் பணத்தை கண்காணிப்பதே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியப் பொறுப்பு.

image

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தலைமை அலுவலகத்தின் கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன. அப்போதுதான், சத்தமின்றி ஒரு குற்றச்சம்பவம் அரங்கேறியிருப்பது அதிகாரி பாலசுப்ரமணிக்கு தெரியவந்தது. அலுவலக கணக்கில் இருந்து 24 லட்சம் ரூபாய் பணமும், 46 சவரன் நகையும் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார் பாலசுப்ரமணி. ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு பணியில் இருந்த சந்திரா மற்றும் சோனியா ஆகியோரே பணத்தையும், நகைகளையும் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையிடம் புகார் கொடுக்க எண்ணியபோது, பாலசுப்ரமணியிடம் மன்னிப்புக் கேட்ட பெண்கள் இருவரும், திருடியவற்றை திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதியளித்தனர். ஆனால் பிரச்னை அதோடு நிற்கவில்லை. செய்த தவறுக்காக அவர்களை பணி நீக்கம் செய்த பாலசுப்ரமணி, திருடிய பணத்தைத் தருமாறு நிர்பந்தித்து வந்திருக்கிறார்.

image

இந்நிலையில், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பாலசுப்ரமணி வீட்டில் ஒரு எதிர்பாராத தாக்குதல் சம்பவம் நடக்கிறது. வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், பாலசுப்ரமணியின் மனைவியைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். அதுகுறித்த விசாரணையில் விஷ்ணு, பிரகாஷ், அங்கப்பன் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

நிதி நிறுவனத்தில் திருடிய பணத்தைக் கேட்டு நிர்பந்தித்து வந்த பாலசுப்ரமணியை கொலை செய்வதற்காக இம்மூவரையும் வைத்து சந்திராவும், சோனியாவும் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. கொலை முயற்சி தவறியதால் இக்கும்பல் சிக்கிய நிலையில், 5 பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் திருடப்பட்ட பணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments