புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93. இதயநோய் காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சாந்தா அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சுத்திணறல் காரணமாக மறைந்தார்.
சாந்தாவின் உடல் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 67 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மருத்துவர் சாந்தா, கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவமனையின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். ஆரம்பத்தில் மகப்பேறு மருத்துவராக பணியை தொடங்கிய அவர், அதன்பிறகு மேல்படிப்பு படித்து புற்றுநோய் துறை வல்லுனராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் விளங்கினார்.
கடந்த 1955ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அழைப்பின் பேரில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அவருடன் இணைந்து சேவை புரிய வந்தவர், அதன்பிறகு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள வீட்டிலேயே தங்கி முழுநேர மருத்துவ சேவை புரிந்து வந்தார்.
புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் அதற்கான சிகிச்சை அளிப்பதில் உலகப் புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்த சாந்தா, தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர்.
சாந்தாவின் அரும்பணியைப் பாராட்டி புதிய தலைமுறை அவருக்கு தமிழன் விருது வழங்கி கெளரவித்தது. விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்த அவர், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர். 93 வயதிலும் மருத்துவ சேவையாற்றி வந்த சாந்தா-வின் இழப்பு, புற்றுநோய் மருத்துவ துறைக்கே பேரிழப்பு என்றே கூற வேண்டும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2LC3OcQ
via IFTTT
0 Comments