அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு 

LATEST NEWS

500/recent/ticker-posts

அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு 

சென்னை காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து இணையவழி பதாகைப் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

''அதானி துறைமுகங்களின் துணை நிறுவனமான மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் (எம்ஐடிபிஎல்) என்ற நிறுவனம், சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தை தற்போதைய அளவான ஆண்டுக்கு 24.66 மில்லியன் டன்இல் இருந்து ஆண்டுக்கு 320 மில்லியன் டன் ஆக விரிவாக்கம் செய்யும் திட்டத்தை முன்மொழிந்து, சுற்றுச்சூழல் அனுமதிக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பித்துள்ளது.

இத்திட்டத்திற்கு தேவைப்படும் 6111 ஏக்கரில் கிட்டத்தட்ட 2300 ஏக்கர் மக்கள் பயன்பாட்டிலும், வாழ்வாதாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் 2000 ஏக்கர் அளவில் கடல் பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில், சுமார் 6 கி.மீ வரையிலான கடல் பகுதிகளில் மணல் கொட்டப்படவுள்ளது. இவ்வாறு கடற்பரப்பில் மணலை கொட்டி அதன் இயல்புத் தன்மையிலிருந்து மாற்றுவது திரும்பப்பெறவியலா சூழலியல் மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும், இத்திட்டதின் மூலம் 2000 ஏக்கர் அளவிலான பழவேற்காடு நீர்ப்பகுதிகளும், கொற்றலை ஆற்றின் உப்பங்கழிகளும் தொழிற் பூங்காக்களாக மாற்றப்பட உள்ளது. குறைந்தது 6 முக்கியமான மீன்பிடி தளங்கள் இத்துறைமுகத்தால் அழிக்கப்படும். துறைமுகத்தால் ஏற்படும் கடல் அரிப்பு அளவில் சிறிய காட்டுப்பள்ளி தீவை எளிதில் சுரண்டிவிடும்.

இது நடந்தால், பழவேற்காடு காயல் பகுதி இனி இருக்காது, ஏனெனில் அது வங்காள விரிகுடாவில் ஒன்றிணைந்துவிடும். இதனால் பழவேற்காடு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடற்றவர்களாக மாற்றப்படுவார்கள். பழவேற்காட்டின் காயல் பகுதி, கொற்றலை ஆறு, எண்ணூர் கழிமுகம் ஆகியவையே சென்னையில் பெருமழை காலங்களில் வெள்ளத்தின் வடிகாலாக அமைகின்றன. துறைமுகத்தை விரிவுப்படுத்துவதன் மூலம் ஏற்படும் கடல் அரிப்புகளால் இந்த இயற்கை வெள்ள வடிகால்களையும் இழப்பதால் மழைக்காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளத்தின் அளவு வரும்காலங்களில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில் தற்போது அமைந்துள்ள துறைமுகங்களினால் ஏற்பட்ட கடல் அரிப்புகளே கடலோர கிராமங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டுபள்ளியில் இருபது மடங்கு அளவில் துறைமுக விரிவாக்கம் செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் அழிவை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 22.01.2021 அன்று காலை 11 மணியளவில் சென்னை, மீஞ்சூர் பகுதியில் உள்ள சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் உள்ள பகவான் மகாவீர் கலையரங்கத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்தும், சனவரி 22, 2021 அப்பகுதியில் வாழும் மக்கள் பெருந்திரளாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்குச் சென்று தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்யவும் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக வரும் சனவரி 21, 2021 அன்று இணையவழி விழிப்புணர்வு பரப்புரை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாம் தமிழர் கட்சியின் அனைத்து உறவுகளும், அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்க திட்டத்திற்கு எதிரான கண்டனப் பதாகைகளை ஏந்தி, அதன் புகைப்படங்களை அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி, இந்த இணையதள விழிப்புணர்வு பரப்புரையை மாபெரும் வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.''

இவ்வாறு சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2LBZ0nM
via IFTTT

Post a Comment

0 Comments