"மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம்’’ என்று கூறி பொதிகை
தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி அறிக்கையை ரத்து செய்யக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்துவைத்து உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," பிரசார்பாரதி பொதுமக்களுக்கு
சேவைசெய்யும் நோக்கில் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து செயற்கைக்கோள் சேனல்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் பொதிகை தொலைக்காட்சி
உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்களாக உள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி
முதல் 7 மணி முதல் 7.15 மணிவரை 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை வாசிக்கப்படும் என அறிவிப்பு வெளியானதோடு நடைமுறையும்
படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சமஸ்கிருத மொழியை பேசுவோர் உள்ள
நிலையில் தமிழகத்தில், தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் சமஸ்கிருத செய்தி அறிக்கையை ஒளிபரப்புவது ஏற்கத்தக்கதல்ல. அரசியலமைப்பின் 8ஆவது
அட்டவணைப்படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவ்வனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சம அளவிலான பங்களிப்பை வழங்கவேண்டும். ஆனால்
அவ்வாறின்றி சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக மட்டும் ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சமஸ்கிருத மொழியை விட பழமையான
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்காததோடு, தமிழகத்தில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தியுள்ளது
ஏற்கத்தக்கதல்ல.
ஆகவே பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை வாசிக்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும். மேலும் அரசியலமைப்பின்
8ஆவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கிட உத்தரவிட வேண்டும்" என
கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, "மனுதாரருக்கு
தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம். இதனைவிட முக்கியமான பிரச்னைகள் பல
உள்ளன என தெரிவித்தனர். தொடர்ந்து, மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்துவைத்து
உத்தரவிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2M1E5dC
via IFTTT
0 Comments