ஓசூர் முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஓசூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையமும் அருகில் உள்ளது.
இன்று காலையில் வங்கி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது 6 பேர் வாடிக்கையாளர்கள்போல் பின் தொடர்ந்துவந்துள்ளனர். வங்கியை திறந்தபிறகு உள்ளே நுழைந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, அலுவலகத்தின் மேனேஜர் உட்பட 6 பேரை கட்டிப்போட்டு, லாக்கரின் சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி பண்டி கங்காதர் தலைமையிலான குழு சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்துவருகிறது. சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது அவர்கள் ஹெல்மட் மற்றும் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் நடை, உடை, பாவனைகள் அனைத்தையும் வைத்து அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த குற்றவாளிகள் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கங்காதர் கூறியிருக்கிறார். எனவே இதுகுறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைத்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தற்போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதுகுறித்து தெரிவித்த வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காவலரிடம்கூட துப்பாக்கி இல்லை. போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே கொள்ளைக்கு காரணம் என தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments