இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து 'ஸ்பாட் பிக்சிங்" உடன் மறைமுகமாக ஒப்பிட்டு பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே கூறிய கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
பிரிஸ்பேனில் ஆஸ்திரேயா அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற நாளை நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் இந்தியா 328 ரன்களை எடுக்க வேண்டும். இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் தொடக்கத்திலேயே முக்கிய பவுலர்கள் காயமடைந்ததால் நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் தங்களுடைய முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினர்.
முதல் இன்னிங்ஸில் நடராஜனும், சுந்தரும் தலா 3 விக்கெட்டை எடுத்து அசத்தினர். அதிலும் ஆஸ்திரேலிய தொடரில் நெட் பவுலராக சென்று 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நடராஜன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் காபா டெஸ்ட் போட்டியில் நடராஜன் வீசிய நோ பால் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். நடராஜன் முதல் இன்னிங்சில் 6 நோ பால்களும் நான்காவது நாளான இன்று ஒரு நோ பாலும் வீசினார்.
இது குறித்து தொலைக்காட்சி நேரலை வர்ணனையில் பேசிய ஷேன் வார்னே "நடராஜன் வீசிய நோ பால்களில், சுவாராஸ்யமான ஒன்றாக எனக்கு தெரிகிறது. நடராஜன் இந்த டெஸ்ட் போட்டியில் 7 நோ-பால்களை வீசி உள்ளார். அது எல்லாம் மிகப்பெரிய நோ பால்கள். பெரிதான. அந்த நோ பால்களில் ஐந்து அவர் வீசிய ஓவரின் முதல் பந்து. அவை அனைத்தும் கிரிஸை விட்டு மிகவும் தள்ளி போடப்பட்டது. நாங்கள் அனைவரும் கூட நோ பால் வீசியுள்ளோம். ஆனால் குறிப்பாக ஓவரின் முதல் பந்தை மட்டும் நோ பாலாக வீசுவது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்" என தெரிவித்தார்.
ஷேன் வார்னின் இந்த கருத்து நடராஜன் ஸ்பாட் ஃபிக்சிங்சில் ஈடுபட்டார் என்பதை குறிப்பது போல் அமைந்தது. அவர் நேரடியாக இதனை சொல்லாமல் மறைமுகமாக கூறியுள்ளார். இதனால் கடுமையான கோபத்துக்கு ஆளான ரசிகர்கள் ஷேன் வார்னவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2XS4o8M
via IFTTT
0 Comments