பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் அறுவடை நாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால், அறுவடைத் திருநாளை கொண்டாடத் தயாராக வேண்டிய நேரத்தில் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். விருத்தாசலத்தில் 2,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலூரில் 50,000 ஏக்கர் நெர்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. தஞ்சையில் 80,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. புதுக்கோட்டையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி குளம்போல் மாறியுள்ளன விவசாய நிலங்கள். மயிலாடுதுறையில் 5,200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
தா.பழூர், அரியலூர் திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே நிவர், புரெவி புயல் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மீதி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில் பருவம் தவறிபெய்த மழையால் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்துள்ளனர் விவசாயிகள். மழையால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாயின.
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். விருத்தாசலத்தில் 500 ஏக்கரிலும், கம்மாபுரத்தில் 2 ஆயிரம் ஏக்கரிலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கள்ளத்தூர் உள்ளிட்ட இடங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வெட்டியும் தண்ணீர் வடியவில்லை பயிர்களை மூழ்கடித்து குளம்போல் மாறியுள்ளது. ஏற்கனவே கடன்பெற்று சாகுபடி செய்த நிலையில் தற்போது பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, அன்னவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் 80 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. நெற்பயிர்கள் அழுகிய நிலையில் இனி மழை நின்றாலும் அதனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியுள்ளன. கதிர்கள் அனைத்தும் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளதால் அதனை காப்பாற்றுவது கடினம் என அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
தொடர் மழையால், அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கழுகுப்பார்வையில் பார்க்கும்போது பாதிப்புகளின் உச்சம் தெளிவாக தெரியவருகிறது. இத்தனை நாள் பாடுபட்டு விளைவித்து பலன் காணும் நேரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bDe2nC
via IFTTT
0 Comments