கொடுத்த பொறுப்பை அறிந்து விளையாடும் படைவீரன் வாஷிங்டன் சுந்தர்!

LATEST NEWS

500/recent/ticker-posts

கொடுத்த பொறுப்பை அறிந்து விளையாடும் படைவீரன் வாஷிங்டன் சுந்தர்!

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2017-இல் அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். ஐபிஎல் மூலமாக இந்திய அணியில் அறிமுகமான வீரர்களில் அவரும் ஒருவர். அதனால் தேர்வாளர்கள் அவரை ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டராகவே பார்த்தனர். அதன் விளைவாக 2017-இல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டி20 அணியில் இடம்பெற்றார்.

இருப்பினும் கேதார் ஜாதவின் காயம் அவரை ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாட செய்தது. முதலில் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கினார். தொடர்ந்து அதே தொடரில் டி20 போட்டியிலும் அறிமுக வீரராக விளையாடினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பு கொடுக்க முடியும் என்பது வாஷிங்டன் சுந்தரின் பிளஸ். 

image

தொடர்ந்து 2018 ஐபிஎல் தொடரில் கோலி கேப்டனாக வழிநடத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றார். ரன்களை அதிகமாக விட்டுக்கொடுக்காமல் நேர்த்தியாக பந்து வீசுவதில் வாஷிங்டன் சுந்தர் கெட்டிக்காரர். அதுவே அவருக்கு இந்திய டி20 அணியில்  இடத்தையும் பெற்றுக் கொடுத்தது. அவரது 185 சென்டிமீட்டர் உயரமும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்தது. இதுவரை இந்தியாவுக்காக 26 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இருந்தார். 

“இந்தியாவுக்காக அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும்” என அண்மையில் ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியோடு தங்கியிருந்தார். இருப்பினும் இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம் பெறவில்லை.

அந்த சூழலில்தான் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக காயம் அடைந்துக் கொண்டிருந்தனர். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் ஷர்மா, ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், விஹாரி, அஷ்வின், பும்ரா, ஜடேஜா என இந்திய வீரர்கள் வரிசையாக ஒவ்வொரு போட்டியாக காயத்தினால் விலகினர். இதில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் இடத்தை நிரப்பும் வல்லமை படைத்த வீரர்கள் யாரும் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக இருந்தது.

ஒருநாளில், டி20, டெஸ்ட் என ஜடேஜா நல்ல பங்களிப்பை கொடுத்திருந்தார். கடைசி போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என சொல்லப்பட்டது. அதேபோல காபா டெஸ்டின் முதல் நாளன்று வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 

image

காபா மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவது அரிதினும் அரிது. அதுமாதிரியான மைதானத்தில் முதல் நாளன்றே டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இது அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டும் கூட. அதே இன்னிங்ஸில் கேமரூன் கிரீன் மற்றும் நாதன் லயன் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். மொத்தமாக 12 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தபோது ரோகித், கில், புஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், பண்ட் என இந்திய அணியின் பிரதான பேட்ஸ்மேன்கள் 186 ரன்களுக்கு எல்லாம் விக்கெட்டை இழக்க, வாஷிங்டன் சுந்தர் ஒரு பேட்ஸ்மேனாக ஷர்துல் தாக்கூருடன் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். 

வலது கை சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நிதானமாக கையாண்டார். 144 பந்துகளில் 62 ரன்கள். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளும் அடங்கும். அவர் முதல் பவுண்டரி அடித்தபோது “சாலிட் ஷாட். இருந்தாலும் இதை சுந்தர் தொடர்வாரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தனர் போட்டியின் வர்ணனையாளர்கள். ஆனால் அவர் ஆடிய ஒவ்வொரு ஷாட்டுமே அக்மார்க் கிரிக்கெட் ஷாட் தான். அதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பாடி லைன் அட்டாக்கையும் வாஷிங்டன், கூலாகவே ஹேண்டில் செய்தார். எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அடிக்காமல் விட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.  அதன் பலனாக தாக்கூருடன் 123 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். 

தனக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து கொண்டு செயல்படும் படைவீரனைபோல வாஷிங்டன் சுந்தர் செயல்படுகிறார். ஜடேஜாவுக்கு மாற்று என்பதையும் வாஷிங்டன் முதல் போட்டியிலேயே நிரூபித்து விட்டார். பவுலராக மூன்று விக்கெட், ஃபீல்டராக ஒரு கேட்ச் மற்றும் பேட்ஸ்மேனாக 62 ரன்கள். அந்நிய மண்ணில் அறிமுக போட்டி என்ற எந்தவித அச்சமும் இல்லாமல் விளையாடிய அசத்திய ‘குட்டிப்புலி’ வாஷிங்டன் சுந்தர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2XMfRq6
via IFTTT

Post a Comment

0 Comments