அதிமுகவையும் எம்.ஜி.ஆரையும் எப்படி பிரிக்க முடியாதோ.. ஜெயலலிதாவையும் அதிமுகவையும் எப்படி பிரிக்க முடியாதோ.. அதேபோலத்தான் சசிகலாவையும் அதிமுகவைவிட்டு பிரித்து பார்க்க முடியாது. காரணம், எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட அதிமுகவை மெருகூட்டியவர் ஜெயலலிதா. அதற்கு பக்கபலமாகவும் தூணாகவும் நின்றவர் சசிகலா என்ற கருத்து இன்றுவரை பலராலும் முன்வைக்கப்படுகிறது.
கட்சியில் அடிமட்ட தொண்டர் பணியில் இருந்து பெரிய பொறுப்புக்கு வந்தவர் என பலர் மார் தட்டிக்கொள்வதுண்டு. ஆனால் சசிகலா அதற்கும் ஒரு படி மேல் என்றே சொல்லலாம். ஜெயலலிதா ஆளுமையில் இல்லாதபோதே அவருக்கு உதவியாளராக சேர்ந்த சசிகலா கட்சி சார்ந்த பிரச்னைகளிலும் ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்தார் என்பது பலரும் அறிந்ததே.
சசிகலாவின் கட்சி ரீதியிலான அடிமட்ட பணி அப்போதிலிருந்தே தொடங்கிவிட்டது. சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா மனதார உணர்ந்திருந்தார். சசிகலா, ஜெயலலிதாவுக்கு அதைச் சரியான சந்தர்ப்பங்களில் உணர்த்தியும் இருந்தார். தேவையான நேரங்களில் உடன் இருந்தும், தேவையில்லாத நேரங்களில் விலகி இருந்தும் உதவினார் சசிகலா. இந்த உணர்வுக்கடத்தல்தான், இடையில் சின்ன சின்ன சிக்கல்கள் இருந்திருந்தாலும், ஜெயலலிதாவின் இறுதி மூச்சுவரை சசிகலாவைப் அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணம்.
ஜெயலலிதாவுடன் இவ்வளவு நெருங்கிய பிணைப்பு இருந்தாலும் அரசியலில் மட்டும் நேரடியாக தலைகாட்டவில்லை சசிகலா. அரசியல் மற்றும் கட்சி ரீதியான பல்வேறு விஷயங்கள் சசிகலாவின் பார்வைக்கு பின்னே ஜெயலலிதாவிடம் செல்லும் என்று அதிமுகவில் இருப்பவர்களே பலமுறை சொல்லி கேட்டிருக்கிறோம். சசிகலாவிடம் சென்றால் கட்சி ரீதியாக பல விஷயங்கள் நிச்சயம் கைகூடும் என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், இது எதுவுமே வெளி உலகிற்கு அதாவது கட்சியை தாண்டிய உலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதிமுக என்றால் ஜெயலலிதா... அவரைவிட்டால் ஒபிஎஸ் என்றே வெளியுலகத்திற்கு காட்டியதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா இரண்டு முறை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்தபோது கூட, ஓபிஎஸ்சே முதலமைச்சராக இருந்தார். அதேநேரம் ஜெயலலிதா மீண்டும் வரும்போது கிடைத்த முதல்வர் பதவியை அப்படியே ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து விட்டார் ஓபிஎஸ். அதேபோலத்தான் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அவசர முதலமைச்சராக பதவியேற்றார் ஓபிஎஸ். ஆனால் இந்த முறை ஓபிஎஸ்சுக்கு நிலைக்கும் என நினைத்திருந்த முதல்வர் பதவி சசிகலாவால் தட்டிப்பறிக்கப்பட்டது. ஆம், ஜெயலலிதா மரணம் வரை எந்தவொரு அரசியல் ரீதியான பொறுப்புகளுக்கும் முயற்சிகளை எடுக்காமல் இருந்த சசிகலாவின் மனதில் புதிய கனவுகள் தோன்ற ஆரம்பித்தது.
அவசரமாக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார் சசிகலா. அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவை முதல்வராக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது மிகப்பெரிய நாடகமே அரங்கேறியது என்ற விமர்சனம் இதுவரை உண்டு. சசிகலா, ஜெயலலிதாவை போன்றே தன்னுடைய தோற்றத்தை அலங்காரம் செய்துகொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார்.
அவர் ஆசைப்பட்ட முதல்வர் பதவி, கிட்டதட்ட பக்கத்தில் சென்று இறுதி நேரத்தில் எட்டாக்கனியாக மாறியது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு தள்ளப்பட்டார் சசிகலா. அடுத்து என்ன நடக்கப்போகிறது யார் முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்த போது, சிறைக்கு செல்லும் முன்பு தனது தீவிர விசுவாசி என நினைத்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினார் சசிகலா. ஆனால் ஆட்டம் கண்டிருந்த அதிமுகவை பலப்படுத்துவதற்காக சசிகலா குடும்பத்திற்கு டாட்டா காட்டிவிட்டு ஓபிஎஸ்சுக்கு பச்சைக்கொடி காட்டினார் எடப்பாடி.
அதன்பின்பு ஓபிஎஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும் பல்வேறு மனகசப்புகளை கடந்து மீதமிருந்த ஜெயலலிதாவின் 4 ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளனர் இரட்டை குழல் துப்பாக்கிகள் ஓபிஎஸ்-ஈபிஎஸ். தொடர்ந்து 2021 சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவிட்டது. அதிலும் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என பன்னீர்செல்வமே முன்மொழிந்தார். இருந்தாலும் இருவருக்குமிடையேயான மனக்கசப்பு அவ்வபோது வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதனிடையே எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்க பாஜக தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில்தான் சசிகலா மீண்டும் சிறையில் இருந்து வெளியே வருகிறார். வரும் ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா வெளியே வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவார் எனவும் சிறுது நாட்கள் மன்னார்குடியில் ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓய்வுக்கு பின் அமமுக நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலையை மீட்பதற்கான வேலைபாடுகளில் ஈடுபடுவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் அடுத்தகட்டமாக சசிகலாவின் நகர்வுகள் என்னமாதிரி இருக்கும்? அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? கூட்டணி குறித்து பாஜக நிலைப்பாடு என்ன? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
இதுகுறித்து பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அதிமுகவை விட்டுத்தருவார்கள் என்று தோன்றவில்லை. இவர்களுக்குள்ளேயே ஒரு நிழல் போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே புதிய அதிகார மையத்தை அனுமதிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறி.
அதேபோல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது நிறைய பிரிவினைகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அப்போது அதிமுகவில் சலசலப்புகள் உருவாகும். கட்சியின் ஒருசாரார் சசிகலாவை நோக்கி செல்ல வாய்ப்புண்டு. டிடிவி தினகரனும் சசிகலாவும் இணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக அதிமுகவுக்கு நெருக்கடி உருவாகும். ஓட்டு பிளவு ஏற்படும். இந்த பிளவை தவிர்க்க வேண்டுமானால் சசிகலா இணைப்பை தற்போதுள்ள அதிமுக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவாகவே உள்ளன” என்றார்.
இதுகுறித்து அமமுகவின் சி.ஆர்.சரஸ்வதி கூறும்போது “சசிகலாவால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாதா? நன்றியுள்ள மனிதர்கள் யாரும் அப்படி பேச மாட்டார்கள். யாரால் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று எண்ணுபவர்கள் அப்படி பேச மாட்டார்கள். வாழவச்சவங்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள் அவ்வாறு சொல்லமாட்டார்கள்.
இப்போது இருப்பவர்கள் என்னத்த சாதித்தார்கள். ஒரு மாபெரும் கட்சியை, 122 எம்.எல்.ஏக்களை சசிகலாவும் தினகரனும்தான் இணைத்து கொடுத்தார்கள். அந்த இடத்தில் உட்காந்து எடப்பாடி மட்டும் இல்லை யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். அவரை மக்களா உட்காரவைத்தார்கள். இப்பேற்பட்ட சாதனையாளர்கள் ஏன் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற முடியவில்லை. இரட்டை இலை, ஆட்சி, அதிகாரம், மத்திய அரசு என அனைத்தும் கையில் இருந்தும் வெற்றி பெற முடியவில்லையே அது ஏன்?” என்றார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறும்போது “சசிகலாதான் எடப்பாடியை முதல்வராக்கினார். கடந்த 4 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி சசிகலாவை பற்றி பெரிதாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் சசிகலா வருகையால் அதிமுகவில் எவ்வித தாக்கமும் இருக்காது என்றார். சசிகலா குடும்பத்தை கட்சியில் சேர்க்கக்கூடாது மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என இரண்டு நிபந்தனைகளை வைத்துதான் ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடியே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். இதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
கட்சியில் செல்வாக்கு இல்லாததால் யாரை வேண்டாம் என்று சொன்னாரோ அவர்களோடு சேர வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்டுள்ளது. அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும்போது கிட்டதட்ட 5 சதவீத ஓட்டுக்களை பிரித்தது. இது கண்டிப்பாக அதிமுகவிற்கு பின்னடைவுதான். இதேபோல் சசிகலா வெளியே இருக்கும்பட்சத்தில் சட்டமன்றத்தேர்தலிலும் அமமுக தனித்து நின்றால் அதிமுகவிற்கு 40 லிருந்து 50 தொகுதிகள் வரை பாதிக்கக்கூடும். அதனால் அமமுகவுடன் இணைய வேண்டும் என பாஜக அதிமுகவை வலியுறுத்தி வருகிறது. அப்போதுதான் வெற்றி பெற முடியும் என கூட்டணி நிபந்தனை விதித்து வருகிறது பாஜக. இதை எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. சசிகலா வந்தா முதல்வர் பதவி பறிபோகும் என எண்ணுகிறார். இதை ஓபிஎஸ் ஒப்புக்கொள்ளும் மனப்பான்மையுடன்தான் இருக்கிறார். ஓபிஎஸ்சுக்கு கட்சியில் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் சசிகலா வெளியே வந்ததும் அமைச்சர்கள் பலரும் அவரை தேடிச்சென்று சந்திப்பார்கள். இந்தமாதிரியான சந்திப்புகள் ரகசியமாகத்தான் நடக்கும். தேர்தல் தேதிகள் அறிவித்தவுடன் இது வெடிக்கும்.
2016 தேர்தலில்போது வேட்பாளர்களை தேர்வு செய்தது சசிகலாதான். காரணம் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை. எனவே இப்போது அமைச்சர்கள் சசிகலாவிற்கு விசுவாசியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே நான் பார்க்கிறேன். அமமுகவுடன் சேர எடப்பாடி முன்வரவில்லை என்றால் பன்னீர்செல்வத்தை பிரித்து இருதரப்பு சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம். எடப்பாடி தனித்துவிடப்படலாம். முதல்வர் பதவியில் தொடருமாறு சசிகலா கூறிவிட்டால் அவர்களை சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வித தயக்கமும் இல்லை. பாஜகவை பொருத்தவரை சசிகலா கட்சியில் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றே நினைக்கிறது. இல்லையென்றால் கட்சி தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவே கருதுகிறது. இதற்கெல்லாம் முடிவு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments