ரூ.1.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர்... போலீஸ் உதவியோடு சாமர்த்தியமாக மீட்ட மகன்!

LATEST NEWS

500/recent/ticker-posts

ரூ.1.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர்... போலீஸ் உதவியோடு சாமர்த்தியமாக மீட்ட மகன்!

திண்டுக்கல்லில் ரூ. 1.5 லட்சம் பணம் கேட்டு சித்த மருத்துவரை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேருக்கு போலீசாரின் தேடுதலுக்கு உட்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 65). இவர் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்திருக்கிறார். பின்னர் இந்திய பிரஜையாக மாறி சித்த மருத்துவம் படித்து திருச்சியில் சித்த மருத்துவராக இருந்து வருகிறார். மேலும் யூ டியூப் மூலமாக சித்த வைத்தியம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிதரன் என்பவர், தனது தாத்தா திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள சித்தரேவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார் என்று மருத்துவர் யோகநாதனிடம் கூறி அவரை நேரில் பார்த்து சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 26ம் தேதி பேருந்து மூலம் திண்டுக்கல் சென்றுள்ளார் யோகநாதன். அங்கு சசிதரன் மற்றும் அவர் நண்பர்கள் இணைந்து, யோகநாதனை அய்யம்பாளையம் அருகே உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

image

பின்னர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். சசீதரன் மற்றும் 6 பேர் சேர்ந்த அந்தக் கும்பல், யோகநாதன் வைத்திருந்த ஏடிஎம் கார்டை வாங்கி அதிலிருந்து ரூ 25,000 எடுத்துள்ளனர். மேலும் அவரது செல்போன் மூலம் இலங்கையில் உள்ள அவரது மகன் மற்றும் திருச்சியில் உள்ள வளர்ப்பு மகன் விஜயகுமார் ஆகியோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள வைத்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக பணம் ஒன்றரை லட்சம் பணம் அவசரமாக வேண்டும் என கேட்க வைத்திருக்கின்றனர். ஆனால் தந்தை பதட்டமாக பேசியதை அறிந்த அவருடைய வளர்ப்பு மகன், திருச்சியிலுள்ள வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர் திண்டுக்கல்லுக்கு ஒருவருக்கு சிகிச்சை அளிக்க சென்றது தெரியவந்திருக்கிறது.

இதனால் ஏதோ விபரீதம் நடந்ததை அறிந்த விஜயகுமார், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். இதனிடையே மீண்டும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் விஜயகுமாரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டிருக்கின்றனர். `பணம் தயாராக உள்ளது. எங்கு வரவேண்டும்?’ என இயல்பாக கேட்டுள்ளனர். அப்பொழுது கடத்தல் கும்பலைச் சேர்ந்த சசிதரன், பணத்துடன் செம்பட்டி அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் சசிதரன் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மறைந்திருந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்த சசிதரனை கைது செய்தனர்.

image

இதனிடையே சசிதரன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் கடத்தல் கும்பலை சேர்ந்த கேசி பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், திருப்பூரைச் சேர்ந்த கோபி , நாகப்பட்டினத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய யோகநாதன், பொதுமக்கள் உதவியுடன் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தக் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சித்தரேவு சேர்ந்த மணி மற்றும் விமல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். காவல்துறையினரின் துரித நடவடிக்கையின் பேரில் கடத்தப்பட்ட நபர் பத்திரமாக மீட்கப்பட்டார் மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments