மாதம் 25,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் இந்தியாவின் முதல் 10% இடத்தில் உள்ளார்கள் என நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வை எடுத்துக்காட்டும் வகையில் இந்தியாவில் சமத்துவமின்மை நிலை பற்றிய அறிக்கை வெளிவந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள பொருளாதார ஆலோசனைக் குழுவின் இந்திய சமத்துவமின்மை நிலை பற்றிய அறிக்கையானது, சமூக முன்னேற்றம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளிகளை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
அடிப்படை வசதிகள், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகளுடன் குடும்பங்களின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், வருமான சமத்துவம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பிற்கான நடவடிக்கைகள் கணிசமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டின் உயர்மட்டத்தில் ஒரு சதவிகிதத்தினர் தேசிய வருமானத்தில் 5 முதல் 7 சதவிகிதத்தை பெறுகின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது, அதே நேரத்தில் உழைக்கும் மக்களில் சுமார் 15 சதவிகிதத்தினர் மாதம் ரூ 5,000 க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு சராசரியாக ரூ 25,000 சம்பாதிப்பவர்கள், மொத்த ஊதியம் பெறுபவர்களில் முதல் 10 சதவீதத்திற்குள் வருவார்கள் என்றும்,இது மொத்த வருவாயில் 30-35 சதவீதம் ஆகும் எனவும் அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் உள்ள வருமான சமத்துவமின்மை பற்றிய மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக முதல் இடத்தில் உள்ள ஒரு சதவீதத்தினரின் வருமானம் தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், அதே நேரத்தில் கீழே உள்ள 10 சதவீதத்தினரின் வருமானம் சுருங்குகிறது என்று அறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கை தகவல்களை உறுதிப்படுத்துவது போல தேசிய குடும்பம் மற்றும் சுகாதார கணக்கெடுப்பு (NFHS) 2015-16 தரவுகளில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே உள்ள குடும்ப செல்வத்தில் பெரும் இடைவெளி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது, ஆனால் முன்பு நினைத்த அளவுக்கு இல்லை" என்று உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையும் தெரிவித்துள்ளது, இந்தியாவில் தீவிர வறுமை 2011 முதல் 2019 வரை12.3 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால் இது 2004 மற்றும் 2011 க்கு இடையில் இருந்ததை விட மெதுவான விகிதத்தில் குறைந்து வருகிறது என இந்த ஆய்வு தகவல்கள் விவரிக்கிறது.
இந்த வருமான இடைவெளியை குறைக்க நகர்ப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட (MGNREGA) கொள்கைகளை அமல்படுத்தவும், உலகளாவிய அடிப்படை வருமானத்தை (UBI) ஏற்றுக்கொள்ளவும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. உலகளாவிய அடிப்படை வருமானம் என்பது ஒரு கொள்கை முன்மொழிவாகும், இதன் மூலமாக அனைத்து குடிமக்களும் அரசாங்கத்திடமிருந்து சமமான நிதி பரிமாற்ற மானியத்தை பெறுவார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/NUCcnfR
via IFTTT
0 Comments