ரூபாய் 2 கோடி மதிப்புடைய தொன்மையான 2 உலோக சிலைகளை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் அருகே T.மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை கடத்தப்பட இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் டாக்டர். ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரன் வழிகாட்டுதலின்படி, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை மற்றும் காவலர்கள் மதிக்குமார், கோபால், குமாரராஜா, ஜெகதீஸ், ராம்குமார் மற்றும் பிரவீன்செல்வகுமார் ஆகியோர் அடங்கிய சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இச்சிலைகளுக்கு விலை ருபாய் 2 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலை கடத்தல்காரரை நம்பவைத்து அவர் சிலையை காண்பித்தவுடன் அவரை மடக்கிப்பிடித்த சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் மயிலாடுதுறை மாவட்டம் , தரங்கம்பாடி தாலுகா T. மணல்மேடு ரோட்டு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (32) என்பவரிடமிருந்து புத்தமத பெண் கடவுள் உலோக சிலை ஒன்றும், அமர்ந்த நிலையில் விநாயகர் உலோக சிலை ஒன்றும் என 2 சிலைகளை கைப்பற்றினர். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபரை சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் இந்திரா, மேற்கண்ட நபரை விசாரணையின் தொடர்ச்சியாக கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்த உள்ளார். 2 சிலைகளில் ஒன்று புத்தமத கடவுளான அபலோகிதேஸ்வராவின் மனைவி தாரா தேவியின் சிலை என்று சொல்லப்படுகிறது. காக்கும் கடவுளாக அறியப்படும் தாராதேவியின் வழிபாடானது திபெத் நாட்டில் தோன்றியது என்று சொல்லப்படுகிறது.
இந்த சிலையானது 700 ஆண்டு தொன்மையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மற்றொரு சிலையான விநாயகர் சிலை ஏறத்தாழ 300 ஆண்டுகள் தொன்மையானது என்று சொல்லப்படுகிறது. இந்த அரிதான சிலைகள் எதிரிகளிடம் எப்படி வந்தது, யார் கொடுத்தது என்பது பற்றிய புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சிலையானது மேல் நடவடிக்கைகாக புலன் விசாரணை அதிகாரியால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hfTYq3R
via IFTTT
0 Comments