வங்கியால் ஏலம் விடப்பட்ட சொத்தை மீட்டுத்தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.38.5 லட்சம் பணத்தை மோசடி செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையை அடுத்த பிரஸ்காலனி சி.எஸ்.ஐ. நகரைச் சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (43). இவருடைய தந்தை ஞானசிங் என்பவர் கூடலூர் கிராமத்தில் 13.36 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். வயது முதிர்வு காரணமாக தந்தை ஞானசிங், கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், தந்தை ஞானசிங் வாங்கிய நிலத்தை, பிரின்ஸ் ராஜின் மூத்த சகோதரர் இன்பராஜ் தனியார் வங்கியில் ரூ.42 லட்சத்துக்கு அடமானம் வைத்தாக தெரிகிறது. ஆனால், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கி சார்பில் சொத்துக்களை பறிமுதல் செய்தது.
ஆனால், இந்த சொத்தில் பிரின்ஸ் ராஜிக்கும் பங்கு உண்டு என சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து கடன் மீட்பு தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.) மற்றும் கூடுதல் துணை நீதிபதி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் கிச்சன் இன்டீரியர் டிசைன்ஸ் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியான கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த சுமதி (44) மற்றும் நிர்வாக இயக்குனர் கல்பனா (42) ஆகியோர் குட்டி என்பவர் மூலம் இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து பிரின்ஸ் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது சொத்து பிரச்னையை தீர்க்க சாய்பாபா காலனியில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய பிரின்ஸ் ராஜ், சுமதி, கல்பனா ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்த உத்தரவில் தவறு உள்ளதாகவும், கோர்ட்டில் தலையிட்டு வங்கி பறிமுதல் செய்த தங்களுடைய சொத்துக்களை மீட்டுத்தருவதாகவும் கூறி உள்ளனர்.
மேலும் சொத்துக்களை பறிமுதல் செய்த தனியார் வங்கியில் இருந்து ரூ.3 கோடி இழப்பீட்டு தொகையும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அத்துடன் எங்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அதில் ஒருசில அரசியல் வாதிகள், அமைச்சர்களின் புகைப்படங்களை காட்டி உள்ளனர்.
இதையடுத்து அவர் தனது குடும்ப சொத்து திரும்ப கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்த நிலையில், சொத்துகளை பறிமுதல் செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய ரூ.60 லட்சம் பணம் தரும்படி அவரிடம் சுமதி, கல்பனா ஆகியோர் கேட்டுள்ளனர்
இதைத் தொடர்ந்து பிரின்ஸ் ராஜ் 2020-ம் ஆண்டில் 2 பேரிடமும் ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்தை பல்வேறு தவணைகளாக கொடுத்துள்ளார். இந்தநிலையில் பிரின்ஸ் ராஜுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆணை பெற்றதாக சுமதி கூறினார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளாக அவர் கோர்ட்டு உத்தரவு நகலை வழங்கவில்லை.
தொடர்ந்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் 2 பேரும் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அவர்கள் பிரின்ஸ் ராஜை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. சுமதி, கல்பனா ஆகியோர் பிரின்ஸ் ராஜிடம் பணத்தை திரும்ப தருகிறோம் என்று கூறி காசோலை வழங்கினர்.
ஆனால் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பப்பெறப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரின்ஸ் ராஜ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின்படி சுமதி, கல்பனா ஆகியோர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆய்வாளர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுமதி, கல்பான ஆகியோரை கைதுசெய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments