இலங்கை ராணுவத்துடனான போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
குழந்தைகள், பெண்கள் என்றும் பார்க்காமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது. போர் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசி ஏராளமானோரை படுகொலை செய்ததாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன. மகிந்த ராஜபக்ச அதிபராக பதவி வகிக்கும் போது நடந்த இந்த அத்துமீறல்கள், அப்போது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இருந்தபோதிலும், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களர்கள் ராஜபக்சவுக்கு பெரும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்தனர். இதனால் ராஜபக்ச மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் உருவானது.
இந்நிலையில், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சவையும், அவரது குடும்பத்தினரையும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி இருக்கிறார். எந்த சிங்களர்களின் ஆதரவில் ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் அமர்ந்ததோ, அதே சிங்களர்கள் தற்போது அவர்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக சிங்களர்கள், தமிழர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருவதால் அவர்களுக்குள் சுமூகமான உறவு மலர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதரப்பும் தங்களுக்கு இடையேயான பகைமையை மறந்து, நட்பு பாராட்ட தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், இலங்கை போர் நினைவு தினமான நேற்று, யுத்தத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்களால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும் சிங்களர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்த தமிழர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் இரங்கல் அறிக்கைகளும் வாசிக்கப்பட்டன. போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்துவது இலங்கை வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Qh84CUt
via IFTTT
0 Comments