கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த மக்கள், தற்போது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகைக் காய்ச்சல் பரவத் தொடங்கியிருக்கிறது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வகை காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் தக்காளி நிறத்தில் திட்டுகள் ஏற்படுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இவ்வகையான காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக இந்த வகைக் காய்ச்சலால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறையினர் தக்காளி காய்ச்சல் குறித்த விழிப்புணைவையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மக்கள் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சலுடன் தோலில் சிவப்பு நிற திட்டுக்கள் ஏற்பட்டு எரிச்சல், காய்ச்சல், வலியைத் தரும் பாதிப்பு இரண்டு நாள்களுக்கு மேல் தொடர்ந்தால் அது தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தக்காளி நிறத்தில் பாதிப்பு ஏற்படும் இந்த வைரசுக்கும் தக்காளிக்கும் தொடர்பில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/i4U5CLT
via IFTTT
0 Comments