பிரபல தனியார் நிறுவனத்தின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

LATEST NEWS

500/recent/ticker-posts

பிரபல தனியார் நிறுவனத்தின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

எம்.ஜி.எம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இச்சோதனைகள் நடைபெறுவதாக தகவல்.

எம்.ஜி.எம் குழுமம் தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. எம்.ஜி.எம் குழுமம் முதன் முதலில் 1963ஆம் ஆண்டு எம்.ஜி முத்து என்பவரால் துவங்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கால்பதித்து, பின்னர் படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தற்போது தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது.

image

இக்குழுமத்தின் பெயரில் சென்னையில் அம்யூஸ்மெண்ட் பார்க் ஒன்றும் இயங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய அளவில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக எம்.ஜி.எம் குழுமம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகம் பெங்களூரு உட்பட எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்புப் புகாரின் அடிப்படையில் இச்சோதனைகள் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.எம் குடும்பத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.ஜி.எம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு 35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அமலாக்கத்துறையினரின் தொடர் விசாரணையில், எம்.ஜி.எம் மாறானுக்குச் சொந்தமான 293.91 கோடி ரூபாய் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித் துறையினரால் நடத்தப்படும் இச்சோதனைக்கு பிறகே வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - சுப்பிரமணியன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments