
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்த தொடரில், ஒத்திவைக்கப்பட்ட அந்த 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் பயிற்சியாளர்கள், வீரர்களை கொண்ட முதல் குழு ஜூன் 16 அன்று இங்கிலாந்து சென்றுவிட்டனர். டி20 தொடரில் பங்கேற்றிருந்த ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் அடங்கிய 2வது குழு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை முடித்து விட்டு ஜூன் 19 அன்று இங்கிலாந்து கிளம்பினர்.
இந்நிலையில் விமானம் ஏறுவதற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இந்திய வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் இங்கிலாந்துக்கு செல்லவில்லை. தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் அவர், ஜூன் 24 அன்று கவுண்டி மைதானத்தில் துவங்க உள்ள லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார்.

பூரண குணமடைந்த பின், தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி அஸ்வின் இங்கிலாந்து புறப்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hM9k5Gz
via IFTTT

0 Comments