
சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட்டுகள் (பிளாட்ஃபார்ம் டிக்கெட்) விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல மாநிலங்களில் ரயில் எரிப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதனிடையே, அக்னிபாத் திட்டத்தை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு (பார்த் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள எழும்பூர், சென்ட்ரல் உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட்டுகளின் விற்பனை நேற்று முதல் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரத் பந்த் அறிவிப்பின் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் உரிய பயணச் சீட்டுகள் இருக்கிறதா என்பதை டிக்கெட் பரிசோதகர்கள் சரிபார்ப்பார்கள். அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முதியவர்களுடன் வருவோரை மட்டும் ரயில்வே அனுமதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MXd0HwA
via IFTTT

0 Comments