“தமிழகத்தின் உரிமைக்காக பாஜக போராடவில்லை. பாஜக தனது கொள்கையை மாற்றி கொள்ளாத வரை தமிழகத்தில் அக்கட்சியால் வளர முடியாது” என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்தற்கு, பாஜக தரப்பில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்து வருகிறது. இந்த நான்காண்டுகளில் பாஜகவும், அதிமுக நிர்வாகிகளும் பல்வேறு கருத்துக்களை மாறி மாறி தெரிவித்திருந்தாலும், அதிமுகவின் மூத்த தலைவரும் அமைப்புச் செயலாளருமான பொன்னையனின் நேற்றைய கருத்து அதிமுக நிர்வாகிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
நேற்று நடந்த கூட்டமொன்றில் பேசிய அதிமுக பொன்னையன், “பாஜக நட்பு கட்சி தான் என்றாலும், அதிமுகவின் கொள்கையோடு அக்கட்சி ஒத்துபோவதில்லை. தமிழகத்தின் உரிமைக்காக பாஜக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை. பாஜக தனது கொள்கையை மாற்றி கொள்ளாத வரை தமிழகத்தில் அக்கட்சியால் வளர முடியாது.
மாநிலம் சார்ந்த பிரச்னைகளான காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு விவகாரங்களில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. எச்சரிகையுடன் அதனை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு பணியை அதிமுக மேற்கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “எந்த கட்சித் தலைவரும் அவரவர் கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வகையில் அதிமுக நிர்வாகி பொன்னையனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதிமுக முதல்நிலையில் தான் இருக்க வேண்டும்
என்பது அவரது ஆசை. இதில் பாஜகவின் வளர்ச்சி என்பதேதும் இல்லை. 2024ல் மடைதிறந்த வெள்ளம் போல் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் இருப்பது உறுதி. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாரதிய ஜனதா 25 எம்பிக்களை கொண்டு செல்லும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக- பாரதிய ஜனதா இடையே கூட்டணி நீடித்துவருகிறது. 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில், இக்கட்சிகளின் முரண்கருத்துகள் வெளியாகி உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/BLN1e7q
via IFTTT
0 Comments