
சென்னையில் கஞ்சா போதையில் ரவுடியின் சகோதரர் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11ஆம் தேதி திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஜெஜெ நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபடும் ரவுடி நந்தா என்பவரின் சகோதரர் யுவராஜ் கஞ்சா போதையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரோந்து போலீசார் அதே பகுதியில் யுவராஜை பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் போது, உடையை மாற்றிக்கொண்டு போலீசுக்கு தெரியாமல் தப்ப முயன்றுள்ளார். அப்போது போலீசார் யுவராஜை விசாரணைக்காக அழைத்துச்செல்ல முயன்றுள்ளனர். கஞ்சா போதையில் காவல்துறையினரே தொடர்ந்து மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

விசாரணைக்காக காவல்துறையினர் யுவராஜை அழைத்துச்செல்ல தொடர்ந்து முற்பட்டபோது யுவராஜ் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபடுவதும் பொதுமக்களில் ஒருவர் தட்டிக்கேட்க முயலும் போது அவரை கத்தியை காட்டி தாக்க வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தட்டிக்கேட்ட தனது உறவினரை வெட்டி விடுவாரோ என்ற பயத்தில் பெண் ஒருவர் அலரும் சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் ஜெஜெ நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து யுவராஜ் அழைத்துச் செல்ல முயன்றதும், மேலும் யுவராஜ் மிரட்டும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்களை அடிப்படையாக வைத்து ஜெஜெ நகர் போலீசார் ரவுடி நந்தாவின் சகோதரர் யுவராஜை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments