மதுரையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசிப்பவர் சதீஷ்குமார். கொத்தனார் வேலை செய்யும் இவர், சித்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்த நிலையில், இரு ஆண் குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்னை எழுந்ததாகவும், சதீஷ்குமார் தனது மனைவி சித்ரா மீது சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மனைவியை சதீஷ்குமார் அவதூறாக பேசியுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அருகில் இருந்த பொருளால் சித்ரா தேவியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சித்ராதேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் சதிஷ்குமாரை கைது செய்த நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments