துப்பாக்கியால் சுட்ட மணமகன்; உயிரிழந்த நண்பர் - சோகத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்

LATEST NEWS

500/recent/ticker-posts

துப்பாக்கியால் சுட்ட மணமகன்; உயிரிழந்த நண்பர் - சோகத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்

உத்தரபிரதேசத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மணமகன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் பிராம்நகரைச் சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காக கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமணத்துக்கு பிறகு மணமகன் மணீஷ் மதேஷியாவை அவரது நண்பர்கள் அலங்கார வாகனத்தில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது அவரது நண்பரான பாபுலால் யாதவ் (26), தன்னிடம் இருந்த துப்பாக்கியை மணீஷிடம் கொடுத்து வானத்தை நோக்கி சுடுமாறு கூறினார்.

image

இதையடுத்து மணமகனும் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி சுட்டார். அப்போது எதிர்பாராவிதமாக அந்த குண்டு, நண்பர் பாபுலால் யாதவின் தலையில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாபுலாலை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாபுலால் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாபுலால் யாதவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மணமகன் மணீஷை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணக் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபத்தை உணராமல் சிலர் மேற்கொள்ளும் செயல்கள், விபரீதத்தில் முடியும் என்பதற்கு இச்சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments