
முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கட்டுள்ளது.
முன்னாள் அதிமுக உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அடையார், மைலாப்பூர், போயஸ் கார்டன் உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்னிலம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காமராஜ் பதவியில் இருந்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்துள்ளார். கூடுதல் பொறுப்பாக ஒரு வருடம் இந்து அற நிலைய துறை அமைச்சராகவும் காமராஜ் பணியாற்றி உள்ளார்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015-2021 ஆம் ஆண்டு பதவி வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ் தான் முறைகேடாக சம்பாதித்த தொகையை அவரது நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்திரசேகர் மூலமாக சொத்துக்களை குவித்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு சட்டவிரோதமாக அவரது நண்பர்கள் மூலமாக தஞ்சாவூரில் உள்ள NARC ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற சொத்துக்களை வாங்கி கட்டுமான தொழில் செய்த வருமானத்தை மறைத்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தனது மகன்கள் நடத்தும் வாசுதேச பெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தை முறைகேடாக வாங்கி நடத்தி வருவதும் லஞ்சஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 27,25,8350 ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்து காமராஜ் சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டு காமராஜ்,குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் இருந்த சொத்துகளின் மதிப்பு ரூ.1,39,54,290 ரூபாய். ஆனால் 2021ஆம் ஆண்டு முடிவில் ரூ.60,24,50,039 ரூபாய் அளாவாக சொத்துக்கள் உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட 6 பேரின் வருமானம் ரூ.12.99 கோடி என லட்சம் லட்சமாக இருந்துள்ளதாகவும், செலவு செய்த தொலை ரூ.12.59 கோடி என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58,84,50,879 ரூபாய் சொத்துகள் குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளது.
- செய்தியாளர்: சுப்ரமணியன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments