
புஜாராவை தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அவசர கதியில் ஆடாமல் இருந்து இன்றைய நாள் முழுவதும் களத்தில் இருக்க வேண்டும் என்று பொறுப்புணர்ந்து ஆடியிருந்தால் இந்தியாவின் பக்கம்தான் வெற்றிவாய்ப்பு இருந்திருக்கும்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் பண்ட் மற்றும் ஜடேஜா சதத்தின் உதவியுடன் 416 ரன்களை குவித்தது இந்திய அணி. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ மட்டும் சதமடிக்க, மற்றவர்கள் சொதப்பியதால் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் களமிறங்கியது இந்திய அணி.

சுப்மான் கில், விஹாரி, கோலி ஆகிய மூவரும் இங்கிலாந்து பவுலர்களிடம் வரிசையாக விக்கெட்டை பறிகொடுக்க, நெருக்கடியான தருணத்தில் இணை சேர்ந்தனர் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட். வழக்கமான தடுப்பாட்டத்தை புஜாரா கையிலெடுக்க, அதிரடிப் பாதைக்கு திரும்ப முயற்சித்தார் பண்ட். 135 பந்துகளை சந்தித்து புஜாரா அரைசதம் கடந்தார். பவுண்டரிகளை பறக்கவிட்டபடி 76 பந்துகளில் அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். ஆனால் பிராட் பந்துவீச்சில் புஜாரா விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.
![]()
அப்போது பெவிலியனில் இருந்த இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் பவுலர்களிடம் “ஷார்ட் பால்” என்று சைகை காட்டினார். மெக்கல்லமின் சைகையை சரியாக புரிந்துகொண்ட மேத்யூ பாட்ஸ் ஒரு வேகமான ஷார்ட் பால் பவுன்சரை வீசினார். ஸ்ரேயாஸ் அடித்த அந்த பந்து மிட்-விக்கெட்டில் நின்றிருந்த ஆண்டர்சனிடம் சரியாக கேட்ச் ஆனது. விரக்தியில் பெவிலியனை நோக்கி நடையை கட்டினார் ஸ்ரேயாஸ். அடுத்து களமிறங்கிய ஜடேஜா தடுப்பாட்டத்தை ஆடத் துவங்கும்போது பண்ட் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய தாகூர், ஷமி வந்த வேகத்தில் நடையைக் கட்ட இவர்களை பின் தொடர்ந்து ஜடேஜாவும் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பற்கொடுத்தார். நைட் வாட்ச்மேனாக களத்தில் கேப்டனாக பும்ரா நிற்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரும் 7 ரன்னில் அவுட். 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 378 ரன்களை இங்கிலாந்திற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஸ்கோரை பார்த்தால் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதுபோல தோன்றி இருக்கும். ஆனால் இன்னும் ஒன்றரை நாளுக்கு மேல் ஆட்டம் இருக்கும் நிலையில், மெக்கல்லமின் வியூகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 பாணி அதிரடியை கையிலெக்கும் இங்கிலாந்து அணிக்கு இந்த ஸ்கோர் போதாது...
புஜாராவை தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அவசர கதியில் ஆடாமல் இருந்து நாள் முழுவதும் களத்தில் இருக்க வேண்டும் என்று பொறுப்புணர்ந்து ஆடியிருந்தால் இந்தியாவின் பக்கம்தான் வெற்றிவாய்ப்பு இருந்திருக்கும். தொடரையும் 3-1 என வென்றிருக்கலாம். ஆனால் தலைக்கு மேல் வெள்ளம் சென்ற கதையாகி விட்டது. ஓப்பனர்களாக களமிறங்கிய அலெஜ்ஸ் லீஸ், க்ராவ்லே இருவரும் அதிரடியாய் ரன் சேர்க்க, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கிப் போனது.

அலெக்ஸ் லீஸ் அரைசதத்தை அசால்ட்டாக விளாச, க்ராவ்லே 46 ரன்களில் நடையைக் கட்டினார். ஒல்லி போப் டக் அவுட் ஆக, அதைத் தொடர்ந்து அலெக்ஸும் ரன் அவுட் ஆக இந்தியாவின் வெற்றிக்கு ஒரு ஒளி தெரிந்தது. ஆனால் அதை இருட்டடிப்பு செய்தது ஜோ ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி. ஓவருக்கு ஒரு பவுண்டரியை திட்டமிட்டு இந்த கூட்டணி விளாச, மிக இலகுவாக இலக்கை நோக்கி பயணித்தது இங்கிலாந்து.

ஜோ ரூட் சதம் கடக்க, பேர்ஸ்டோவும் சதம் விளாச, வெற்றி இங்கிலாந்து வசம் சென்றது. 76.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியை ருசித்தது மெக்கல்லம் படை. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து. லட்டு போன்ற மேட்சை கோட்டை விட்டிருக்கிறது இந்திய அணி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/pEqMter
via IFTTT

0 Comments