
ஓலா நிறுவனம் தொடங்கப்பட்ட 11 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் லாப பாதைக்கு ஓலா திரும்பவில்லை. ஓலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முக்கியமானது “ஓலா” நிறுவனம். ஆனால் சமீபகாலத்தில் அந்நிறுவனம் குறித்து வரும் செய்திகள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஓலா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் என்னும் இரு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இந்த குழுமம் குறித்து தொடர்ந்து எதிர்மறை செய்திகளே வெளியாகின்றன.
ஒலா கார்ஸ்:
இந்த பிரிவு கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதற்காக இந்த பிரிவு உருவாக்கப்பட்டது. 30 நகரங்களில் இப்பிரிவு தொடங்கப்பட்டது. இதனை 100 நகரங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பிரிவினை மூடுவதாக ஒரு வாரத்துக்கு முன்பு ஓலா நிறுவனம் அறிவித்தது.

அதேபோல ஓலா டேஷ் என்னும் மளிகை டெலிவரி பிரிவை கடந்த ஜனவரியில் தொடங்கியது. இந்த பிரிவையும் பல நகரங்களுக்கு கொண்டு செல்ல ஓலா திட்டமிட்டது. ஆனால் இதுவும் மூடப்பட்டது. மொத்த கவனத்தையும் ஓலா எலெக்ட்ரிக்-ல் செலுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பிரிவும் சிறப்பாக இல்லை என்பதுதான் கள எதார்த்தம்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பல உயரதிகார்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 32 உயரதிகாரிகள் ராஜினாமா செய்திருப்பதாக எகனாமிக் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டிருக்கிறது. சார்ஜிங் பிரிவு தலைவர், மனிதவள துறை இயக்குநர் என பல பிரிவுகளின் தலைவர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தின் ஆலை கிருஷ்ணகிரி அருகே பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு பல லட்சம் வாகனங்கள் தயாரிக்க திட்டமிட்டப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் வாகனத்தில் அடிக்கடி தீ பிடித்ததால் சூழல் மாறியது. மேலும் பாதுகாப்பு இல்லாத வாகனத்தை தயாரித்தற்காக ஓலா நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
நான்காம் இடத்தில்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதல் இடத்தில் இருந்தது. அதிகபட்சமாக 12683 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதன் விற்பனை அடுத்தடுத்த மாதங்களில் குறைந்துகொண்டே வந்தது. ஜூன் மாதத்தில் 5869 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. ஜூன் மாத விற்பனை அடிப்படையில் ஒகினாவா ஆட்டோடெக், ஆம்பியர், ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் முன்று இடங்களில் உள்ளன.

நிதி நெருக்கடியா?
ஒலா குழுமத்தின் முக்கியமான தொழிலான கார் வாடகையும் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. கோவிட் காரணமாக நிறுவனத்தின் வருமானம் கடுமையாக சரிந்திருக்கிறது. சுமார் 35000 கார்கள் ஓலாவில் இருந்து வெளியேறி இருப்பதாக தெரிகிறது. இதனால் ஓலா கார்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கல் ஓலாவுக்கு மட்டுமல்ல உபெர் நிறுவனத்திலும் கார்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. நிறுவனம் தொடங்கப்பட்ட 11 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் லாப பாதைக்கு ஓலா திரும்பவில்லை.

ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் முன்பதிவு தொடங்கும்போது வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அதை வாங்கும் ஆர்வம் குறைந்திருக்கிறது. அதேபோல ஓலா கார்கள் கிடைப்பதிலும் கடும் சிரமம் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. ஓலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/wLIWre2
via IFTTT

0 Comments