பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 61 கிலோ பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஒட்டுமொத்தமாக 269 கிலோ (ஸ்நாட்ச் பிரிவில் 118+ க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 151) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார் கர்நாடகாவின் குருராஜா பூஜாரி. இதனால் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்காக 2வது பதக்கத்தை வென்ற வீரராக உருவெடுத்தார்.
வெண்கலப் பதக்கத்திற்காக 3வது இடத்திற்காக இந்தியாவின் குருராஜா கனடாவின் யுரி சிமார்டுடன் கடுமையாக போட்டியிட்டார். ஸ்நாட்ச் பிரிவில் குருராஜா 118 கிலோவை தூக்கிய நிலையில், யுரி சிமார்டு 119 கிலோவை தூக்கியதால் 1 கிலோ பின் தங்கினார் குருராஜா. அடுத்து க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் யுரி சிமார்டு தொடர்ச்சியாக அதிக எடைகளை தூக்கி இறுதி முயற்சியில் 149 கிலோ எடையை தூக்கினார். 151 கிலோவை தூக்கினால் மட்டுமே வெண்கலம் என்ற நிலையில் களமிறங்கிய குருராஜா, அசால்ட்டாக 151 கிலோ எடையை தூக்கி இந்தியாவிற்கான 2வது பதக்கத்தை உறுதி செய்தார்.
இப்போட்டியில் மலேசியாவின் அஸ்னில் பின் பிடின் முஹம்மது ஒட்டுமொத்தமாக 285 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தையும், பப்புவா நியூ கினியாவின் மோரியா பாரு ஒட்டுமொத்தமாக 273 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். குருராஜாவுடன் சரிக்கு சமமாக போட்டியிட்ட கனடாவின் யுரி சிமார்டு ஒட்டுமொத்தமாக 268 கிலோ எடையை தூக்கி 1 கிலோ வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
யார் இந்த குருராஜா புஜாரி?
கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதியான குந்தாப்புரத்தை சேர்ந்தவர் குருராஜா புஜாரி. பிக் அப் டிரக் டிரைவரின் மகனான குருராஜா 2010 ஆண்டு முதல் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வருகிறார். குறைந்த வருமானம் மட்டுமே கிடைத்ததால், அவரது தந்தையால் தனது மகன் குருராஜாவுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு அளிப்பது கூட கடினமாக இருந்திருக்கிறது. எட்டு பேர் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்த குருராஜாவுக்கு போட்டிக்கு பயிற்சி பெறுவது கூட சிக்கலான விஷயமாக இருந்துள்ளது.
ஆனால் இதையெல்லாம் மீறி தனக்கு இருக்கும் சிக்கல்களை ஒரு ஊக்கமாக கருதி பயிற்சி பெற்று தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர் 2016இல் காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 249 கிலோ (108+141) எடையை மொத்தமாக தூக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 61 கிலோ பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/gUNA8ex
via IFTTT
0 Comments