
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்டதற்கும், அக்னிபாத் திட்டத்துக்கும் சம்பந்தப்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. உடல்நலக்குறைவு காரணமாக தனது பிரதமர் பதவியை 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார். எனினும், கட்சி நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனிடையே, கடந்த 8-ம் தேதி ஜப்பான் மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஷின்சோ அபேவை ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்த விவகாரம் ஜப்பான் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்தது.

திரிணமூல் எச்சரிக்கை
இந்நிலையில், இந்த விவகாரத்தை மேற்கோள் காட்டி திரிணமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'ஜகோ பங்களா' நாளிதழில் இன்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அக்னிபாத் திட்டத்தின் மீதான மக்களின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஏனெனில், அபேவை சுட்டுக் கொன்றவர் ஜப்பான் ராணுவத்தில் மூன்றாண்டு குறுகிய கால அடிப்படையில் பணியாற்றியவர். அவருக்கு ஓய்வூதியம் இல்லை. அதுபோலவே, மத்திய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் அக்னிபாத் திட்டத்தில் இணையும் ராணுவ வீரர்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு பின் ஓய்வூதியம் கிடையாது. அக்னிபாத் என்ற பெயரில் நெருப்புடன் விளையாடுகிறது பாஜக. ஜப்பானில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்துவிட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க பாஜக செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், "இந்தியாவில் இதுவரை எந்த முன்னாள் ராணுவ வீரரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. திரிணமூல் காங்கிரஸ் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கிறது" என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1jUmz7M
via IFTTT

0 Comments