
''விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப இங்கிலாந்து உடனான ஒருநாள் தொடர் வாய்ப்பாக அமையும்” என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலகக் கோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில் அண்மை காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் கூட இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் சூசகமாக கூறிவருகின்றனர். எனினும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா, ஒரு வீரர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடும் போது ஒரு தொடரை வைத்தோ, இல்லை ஒரு சில மாதங்களை வைத்தோ முடிவு எடுக்க கூடாது என்று கூறி விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் பேட்டில் ஒன்றில் கூறுகையில், ''ரோகித் சர்மா ரன் அடிக்காதபோது அதைப் பற்றி யாருமே பேசுவதில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? இங்கே எல்லா வீரர்களும் ஒன்றுதான். ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் தரம், திறமை என்பது நிரந்தரமானது. நம்மிடம் நல்ல தேர்வுக் குழு உள்ளது. வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க போதுமான நேரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். வீரரின் ஃபார்மை மனதில் வைத்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு நாள் போட்டித் தொடர் சரியான நேரத்தில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துணைபுரியும். டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலவே, ஒருநாள் ஆட்டத்திலும் செட்டில் ஆக போதுமான நேரம் கிடைக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் நிலைமைக்கு ஏற்ப விளையாட முடியும். எனவே விராட் கோலி தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்ப இந்த ஒருநாள் தொடர் ஒரு வாய்ப்பாக அமையும்”என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.
இதையும் படிக்க: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - இங்கிலாந்து மோதல்: விராட் கோலி விலகல்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/6LTPDMz
via IFTTT

0 Comments