இந்தாண்டு துவக்கத்தில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் போர் மேகங்களின் தகிப்பால் பாதிக்கப்பட்டன. உக்ரைன் அணுமின் நிலையங்களை நோக்கி ரஷ்யப் படைகள் செல்லும் போதெல்லாம் ஐரோப்பிய நாடுகள்தான் அபாய ஒலி எழுப்பி கூச்சலிட்டன. இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வாழ்வியலை அனலாய் பொசுக்கத் துவங்கி இருக்கிறது ஒரு புதிய சிக்கல். ஜூன் மாதம் துவங்கி தற்போது வரை ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் வாட்டி வதைத்து வருகிறது அந்த சிக்கல். அது வேறு ஒன்றுமல்ல! வெப்ப அலைகள்..!
வெப்ப அலையா? அப்படி என்றால் என்ன? அதனால் என்ன பிரச்னை?
வளிமண்டலத்தின் உயர் அழுத்தங்களுக்கிடையே நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சுழற்சிதான் வெப்ப அலை உருவாக காரணம் ஆகும். கோடைகாலத்தின் சூரிய ஒளி, வட ஆப்பிரிக்காவின் அடர்த்தியான நிறைகொண்ட காற்றுடன் இணைந்து ஐரோப்பிய தீபகற்பத்திற்குள் “வெப்ப அலையாக” நுழைந்தது. ஐரோப்பாவில் இந்த அலைகள் வீசுவது இயல்பான ஒன்றாக இருக்கும்போதும், இம்முறை வழக்கத்தை விட அதிகளவு வெப்பத்தை கண்டம் முழுவதையும் பரப்பி இயல்பு வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கும் அளவுக்கு “புயலாக” உருமாறி நுழைந்துள்ளது. ஆம்.! சில காலநிலை நிபுணர்கள் இந்தாண்டு வீசும் அலைகளை “வெப்ப அலை புயல்” (Heat wave storms) என்றே குறிப்பிடுகின்றனர்.
41 டிகிரிக்கு கொளுத்தும் வெயில் - அறிவிக்கப்படாத லாக்டவுனில் இங்கிலாந்து:
ஜூன் மாத துவக்கத்தில் இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் சமீபத்தில் இல்லாத அளவாக 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாக துவங்கியது. இந்நிலையில் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலும் தலைநகரான லண்டனிலும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் 40 - 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
வெப்பத்தாக்கம் காரணமாக, மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தல் வெளியானது. அதிகம் வெயில் அடிக்கக்கூடிய சிவப்பு எச்சரிக்கை பகுதிகளுக்கு பயணப்பட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகமும் எச்சரித்துள்ளது. இந்த அளவு கடுமையான வெயிலை எதிர்கொள்ள ரயில்களை மெதுவாக இயக்க நிர்வாகம் முடிவு செய்ததால், பல ரயில்கள் மிக தாமதமாக பயணிக்க துவங்கின. கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் நீர்நிலைகளையும், நீச்சல் குளங்களையும் நாடிவருகிறார்கள். முன்பு வீசிய வெப்ப அலைகளால் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிக்கலை சந்தித்த நிலையில், இந்தாண்டு கொளுத்திய வெயிலுக்கு ஆரோக்கியமாக இருந்தவர்களும் தங்கள் இன்னுயிரை பறிகொடுக்க, பிரச்னை கைமீறி செல்வதை இங்கிலாந்து அரசு உணரத் துவங்கியது.
இதையடுத்து அதிக வெயில் கொளுத்த வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கணிக்கும் இடங்களுக்கு “தேசிய அவசரநிலையை” அறிவித்து மக்கள் நடமாட்டத்தை முடக்கும் பணியில் அரசு நிர்வாகம் இறங்கியது. 2வது வெப்ப அலை வீசத் துவங்கியபின், ஜூலை 19 அன்று ஏகப்பட்ட தீ விபத்துகள் ஏற்பட்டதால் அதை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்தின் தீயணைப்பு துறை திணறிப்போனது. 19 ஜூலையான இந்நாள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீயணைப்பு படைப்பிரிவின் பரபரப்பான நாளாக மாறியதாக கூறப்படுகிறது. கடும் வறட்சி நிலவுவதன் காரணமாக இங்கிலாந்தில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடிகள் “ஒரு நபர் 3 -5 தண்ணீர் பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும்” என்று அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளன.
8 ஆயிரம் பேர் ஜெர்மனியில் பலி:
ஜெர்மனியில் ஜூன் 14 முதல் 20 வரை வீசிய முதல் வெப்ப அலையால் 39.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியதால், 1,636 பேர் வெப்பம் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 11 முதல் 17 வரை வீசிய 2வது வெப்ப அலையால் 40.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியதால், 6,502 பேர் வெப்பம் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 2 அலைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் ஜெர்மனியில் மட்டும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர்.
43 டிகிரி! உச்சபட்ச வெப்பத்தால் பொசுங்கிய ஸ்பெயின்:
ஸ்பெயினில் ஜூன் மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஒருவாரம் நீடித்த முதலாவது வெப்ப அலையின்போது 829 பேர் உயிரிழந்தனர். ஜூன் 12 அன்று அல்மாடெனில் பகுதியில் 43.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. ஜூலை 14 அன்று துவங்கிய 2வது வெப்ப அலை எக்ஸ்ட்ரீமதுரா காட்டுத்தீக்கு காரணமாக அமைந்தது. இதன் காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது. இந்த அலைக்கு நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,064 ஆகும். பலியானவர்களில் பெரும்பாலானோர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இன்னும் முடியவில்லை வெப்ப அலைகள்!
ஐரோப்பா முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய 2 அலைகள் வீசி ஓய்ந்த போதிலும், இன்னும் முழுமையாக வெப்ப அலை பாதிப்பு முடியவில்லை என்று வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இம்மாதத்தில் மூன்றாம் வெப்ப அலை வீசும் என்றும் தேவையான முன்னேற்பாடுகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவை அறிவுறுத்தியுள்ளன. இந்த 2வது வெப்ப அலையில் ஸ்பெயின் உச்சபட்ச வெப்பநிலையை (43.3 டிகிரி செல்சியஸ்) சந்தித்த நிலையில், மூன்றாவது வெப்ப அலையில் இங்கிலாந்து உச்சபட்ச வெப்பநிலையை எதிர்கொள்ளக் கூடும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. முன்னதாக 2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளை இதே போல வெப்ப அலைகள் தாக்கியதற்கு சுமார் 72 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
திடீர் வெப்ப மாற்றம் ஏன்?
ஐரொப்பாவில் வெப்ப அலைகளின் அதிகபட்ச தாக்கத்தால் இந்த திடீர் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெப்ப அலைகள் இயற்கையாய் உருவானது அல்ல. இதன் உருவாக்கம் மனிதனால் தூண்டப்பட்டது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் சூரிய வெப்பத்தை கிரகித்து புவிப்பரப்பை இயல்பை விட அதிக வெப்பமாக மாற்றும் வேலையை செய்வதாக குறிப்பிடுகின்றனர்.
தொழில்மயமாக்கலுக்கு (Industrialization) பிறகுதான் இந்த வெப்ப அலைகள் உருவானதாகவும் இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்து விட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். வரும் நாட்களில் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை உலக நாடுகள் கணிசமாக குறைக்காவிட்டால் இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் இந்த வெப்ப அதிகரிப்பு நிலை நிச்சயம் மற்ற நாடுகளிலும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/co43S5w
via IFTTT
0 Comments