புதுக்கோட்டையில் மோப்பநாய் பயிற்சிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட கஞ்சாவை முறைகேடாக எடுத்து பயன்படுத்திய மோப்பநாய் பிரிவில் பணியாற்றிய ஆயுதப்படை காவலர்கள் மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையினர் தினசரி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவைகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்பநாய் பிரிவிற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அங்கு எத்தனை நாய்கள் வளர்க்கப்படுகிறது? அதை பராமரிப்பவர்கள் யார் யார்? அதற்கான வழங்கப்பட்ட பல்வேறு பொருட்களையும் ஆய்வு செய்துள்ளார்.
அப்போது மோப்பநாய் பிரிவில் மோப்பநாய் பயிற்சிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட 20 கிராம் கஞ்சா அளவு குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் பிரிவில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களான அஸ்வந்த், சேவியர்ஜான்சன் மற்றும் பழனிச்சாமி ஆகியோரிடம் விசாரணை செய்த போது அரசு சார்பில் வழங்கப்பட்ட 20 கிராம் கஞ்சாவை பணியின்போது அவ்வப்போது சிறிது சிறிதாக எடுத்து பயன்படுத்தி விட்டதாக அந்தக் காவலர்கள் உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மோப்ப நாய்கள் பயிற்சிக்காக வழங்கப்பட்ட கஞ்சாவை காவலர்களே பயன்படுத்தியதற்காகவும் அந்த மூன்று காவலர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments