இருசக்கர வாகனத்தில் கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் செல்வதாக காவல் துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கம்பம் வழியாக குமுளி மற்றும் கம்பம் மெட்டு, போடி மூணாறு ஆகிய சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கோம்பை பகுதிக்குச் செல்லும் சாலையில் உள்ள நாக கன்னியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து சந்தேகப்படும் படியாக நான்கு பேர் நின்றிருப்பதை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோம்பை சாலை பகுதியைச் சேர்ந்த ருத்ரன் (26) ஞானேசன் (44) அலெக்ஸ் பாண்டியன் (24) மற்றும் நெல் குத்தி புளியமரத் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் (48) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து 10 கிலோ கஞ்சாவை கேரளாவிற்கு விற்பனை செய்ய இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த கம்பம் வடக்கு காவல் துறையினர், இருசக்கர வாகனம் மற்றும் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments