கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி மரண விவகாரத்தில் அவரது உடலை ஜூலை 13 அன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள் தூக்கிச் செல்வது போன்ற காட்சியை வெளியிட்டது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மற்றும் மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 17ஆம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் விசாரணைக் குழு அமைத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டார். மாணவி மரணம் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த மாணவியின் பெற்றோர் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், பள்ளியின் கணித ஆசிரியர் கீர்த்திகா, பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஸ்ரீ பிரியா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வருகின்ற 10ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக மாணவி உயிரிழக்கும் முன்பு பள்ளியில் மாணவி வகுப்பறையில் நடந்து செல்லும் வீடியோ எனக் குறிப்பிட்டு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் செல்லும் வீடியோவும் இரண்டாவது வீடியோவாக வெளியானது.
தற்பொழுது மாணவி இறந்ததற்கு பிறகு கடந்த 13ஆம் தேதி காலை 5:30 மணி அளவில் பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் நைட்டி அணிந்த மூன்று பெண்கள் மாணவியை தூக்கிச் செல்வது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடைபெற்று வரும் சூழலில் தாங்கள் எந்த வீடியோவையும் வெளியிடவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படியானால் இந்த வீடியோக்கள் பள்ளி சார்ந்த நபர்களால் வெளியிடப்பட்டனவா அல்லது பள்ளி வளாகத்தை சூறையாடப்பட்ட நாள் அன்று அங்கிருந்து திருடி செல்லப்பட்ட ஹார்ட் டிஸ்கில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியின் செயலாளர் சாந்தி அனைத்து சிசிடிவி ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைத்து விட்டோம் என்று ஏற்கெனவே அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வீடியோ வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்துவோம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்ப வழிவகுத்து இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/VRIuLYn
via IFTTT
0 Comments