கட்சித் தலைவர் பதவி தேர்தலுக்கான நடைமுறையை காங்கிரஸ் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராகும் சூழல் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல்காந்தி மீண்டும் அப்பொறுப்பை ஏற்க மறுத்து வருகிறார். இடைக்காலத் தலைவராக உள்ள சோனியாகாந்தியும் உடல்நிலை மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எழுதிய அதிருப்திக் கடிதத்தை தொடர்ந்து அப்பதவியிலிருந்து விலக முன்வந்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடைமுறைகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸின் தலைவராக ராகுல்காந்தியை மீண்டும் தேர்வு செய்ய நிர்வாகிகள் பலர் குரல் கொடுத்து வரும் நிலையில் அவரோ, பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியும் கட்சித் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் குழப்பத்தில் உள்ள நிர்வாகிகள், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே, முகுல் வாஸ்னிக் ஆகியோரது பெயர்கள் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் அசோக் கெலாட் பெயர் முன்னணியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1998-ஆம் ஆண்டு சோனியா காந்தி தலைவராவதற்கு முன் நேரு குடும்பத்தைச் சாராத சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் 14 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளதாகவும் அதற்கான பட்டியல் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/qjQ8IPe
via IFTTT
0 Comments