காரைக்காலில் போலீசார் மனைவியிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற இருவரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், காரைக்கால் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காரைக்கால் அடுத்துள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 9-ஆம் தேதி பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரைக்கால் கடற்கரை சாலை பாரதி நகரின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜய் (28) மற்றும் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (27) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி சிறைக்கு அனுப்பினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments