ரூ.12 ஆயிரத்துக்கு கீழ் விலையுள்ள சீன செல்போன்கள் விற்பனையை தடை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் செல்போன் விற்பனையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத செல்போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய செல்போன் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 12 ஆயிரம் ரூபாய் விலைக்கு குறைவான உள்ள சீன செல்போன்களை தடை செய்ய ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் அப்படி எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''நாட்டின் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பில் இந்திய நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு, ஆனால் இது வெளிநாட்டு பிராண்டுகளை விலக்குவது என்று அர்த்தமல்ல. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்க சில சீன மொபைல் நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவற்றின் விநியோகச் சங்கிலி, மிகவும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். சீன நிறுவனங்களுக்கு ரூ.12,000க்கு குறைவான மொபைல் போன்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "இந்தியாவில், உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தற்போது 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இவற்றை, 2025-26 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதியை அடைய வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கில், இந்திய பிராண்டுகளுக்கு முக்கியவத்துவம் கொடுக்க உள்ளோம். என்றாலும், இதன் நோக்கம் வெளிநாட்டு சப்ளையர்கள் அல்லது வெளிநாட்டு பிராண்டுகளை விலக்குவது பற்றியது அல்ல. இந்திய பிராண்டுகளை உருவாக்குவது இந்திய அரசாங்கத்தின் கட்டாய கடமை என்று நாங்கள் நம்புகிறோம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments