அறுவை சிகிச்சைக்காக வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இதயம், போக்குவரத்து நெரிசலில் 10 நிமிடத்தில் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது.
வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இதயத்தை நெரிசல் மிகுந்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லி பகுதியை வெரும் 10 நிமிடத்தில் கடந்து எடுத்து சென்றுள்ளார், ஆவடி மாநகர போக்குவரத்து போலீசார். இதயத்தை எடுத்து செல்லும் பரபரப்பான வீடியோ காட்சியை அதிகாரப்பூர் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருக்கிறது ஆவடி காவல் ஆணையரகம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து மூளை சாவடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் அளித்ததை அடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக அவரது உறுப்புகளை மருத்துவர்கள் எடுத்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைக்கும் கண்கள், சிறுநீரகம் மற்றும் இதயம் உள்ளிட்ட உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. குறிப்பாக அவரது இதயம் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.
மேலும் நெரிசல் மிகுந்த சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான, காஞ்சிபுரம் மாவட்ட எல்லை செட்டிப்பேடு பகுதியில் இருந்து வானகரம் வரை, சுமார் 16 கிலோ மீட்டரை வெறும் பத்து நிமிடத்தில் ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து போலீசார் கடக்க வைத்தனர். பின்னர் வெற்றிகரமாக இதயம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி மற்றும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி காரணமாக பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
போக்குவரத்து நெரிசலால் சராசரியாக 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகக் கூடிய பயண நேரத்தை, வெறும் பத்து நிமிடத்தில் வெற்றிகரமாக ஆம்புலன்ஸை கடக்க செய்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் இதயத்தை கொண்டு செல்லும் அந்த பரபரப்பான வீடியோவை, ஆவடி காவல் ஆணையரகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/WX7qlIc
via IFTTT
0 Comments