முதுமலை வனப்பகுதியில் தாயை பிரிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை, மூன்று நாட்களுக்குப் பிறகு தாயுடன் சேர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வன பகுதிக்குள் உள்ள சிங்கார வனப்பகுதியில் நீரோடையில், பிறந்து நான்கு மாதமே ஆன குட்டி யானையை சில தினங்களுக்கு முன் அடித்து செல்லப்பட்டிருந்தது. அதை கடந்த 29 ஆம் தேதி காலை வனத்துறையினர் மீட்டனர். இதையடுத்து குட்டி யானைக்கு குளுகோஸ், இளநீர் உள்ளிட்ட திரவ உணவுகள் வழங்கபட்டது. குட்டி யானையை ராஜேஷ் குமார், கலைவாணன் ஆகிய இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து தாய் யானையை ட்ரோன் கேமரா உதவியோடு தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் சிகூர் வனப்பகுதியில் உள்ள பூதிப்பட்டி கேம்ப் அருகே காட்டு யானைக் கூட்டம் ஒன்று இருப்பதாக வளத் துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து குட்டி யானையை வாகனம் மூலம் அப்பகுதிக்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு தனியாக பெண் யானை ஒன்று நின்று கொண்டிருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வன கால்நடை மருத்துவர்கள் பெண் யானையை ஆய்வு செய்தபோது, அது குட்டி யானைக்கு பால் கொடுக்கும் பருவத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை பணியாளர்கள் குட்டி யானையை அதே பகுதியில் இறக்கி விட்டனர். திடீரென அங்கிருந்து வந்த ஆண் யானை ஒன்று குட்டி யானையை சுற்றி வட்டமிட்டதோடு, வனத்துறையினரை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விரட்டி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து மீண்டும் குட்டி யானை அருகே சென்ற ஆண் யானை, குட்டியை அழைத்து கொண்டு பெண் யானை அருகே சென்றுள்ளது. அதன் பிறகு குட்டி யானையிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனை அடுத்து அந்த பெண் யானைதான் குட்டி யானையின் தாய் என வனத்துறையினர் உறுதி செய்த பின்னர் அப்பகுதியை விட்டு வந்துள்ளனர்.
ஆனால், குட்டி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/j5bASXr
via IFTTT
0 Comments