செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியுமா?

LATEST NEWS

500/recent/ticker-posts

செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியுமா?

மாதா... பிதா... குரு... தெய்வம்... வாழ்க்கையில் தாய், தந்தைக்கு அடுத்தப்படியாக ஆசிரியருக்கு பிரதான இடம் கொடுத்து கவுரவித்தது நமது கலாசாரம். மாணவர்களின் அறிவுக்கண்ணை திறந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏணிப்படியாக இருந்து உதவிய புனிதப்பணியான ஆசிரியப் பணியை போற்றிப் புகழும் தினமாக செப்டம்பர் 5 விளங்குகிறது.

இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும் 2-ஆவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ராதாகிருஷ்ணன் நீண்ட நெடிய பரந்து விரிந்த ஆசிரியப்பணி பின்னணி கொண்டவர். சென்னை அருகே திருத்தணியில் 1888ஆம் ஆண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ராதாகிருஷ்ணன்.

சென்னை மாநிலக் கல்லூரி, மைசூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததுடன் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் இருந்து உலகளவில் மாணவர்களை பெற்றவர் ராதாகிருஷ்ணன்.

image

தத்துவ பாடங்களை கற்பிப்பதில் வல்லவரான ராதாகிருஷ்ணன், இந்திய கலாசார மாண்புகளை உலகெங்கும் கொண்டு செல்லவும் பாடுபட்டார். 16 புத்தகங்களையும் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். இவரது பெயர் இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுக்காக சில முறை பரிந்துரைக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் ராதாகிருஷ்ணன்.

1952 முதல் 1962 வரை நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் 1962ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக உயர்ந்தார். அப்போது அவரது மாணவர்கள் தங்கள் நன்றிக்குரிய குருவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் தன்னுடைய பிறந்த நாளை ஆசிரியர்களை நினைவு கூரும் நாளாக கடைபிடிக்க ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இதன்படியே செப்டம்பர் 5 ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lR8Dpc
via IFTTT

Post a Comment

0 Comments