அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி செய்த போலி ஐஏஎஸ் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்( 62), இவர், கடந்த வாரம் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ”நான் போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக ஓய்வு பெற்று அங்கு டாக்டராக பணிபுரிந்து வருகிறேன்.
எனது நண்பர்கள் மூலம் சேலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவர் என்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும் என்னை அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினருக்கு போட்டியிடலாம் என ஆசை காட்டி அதனை தானே பெற்று தருவதாகவும் கூறினார்.
இதனை நம்பிய நான் இரண்டு, மூன்று தவணையாக கல்லூரி வளாகத்தில் வைத்து சுமார் ரூ.70 லட்சம் வரை பணம் கொடுத்தேன். பணத்தை பெற்று கொண்ட சசிகுமார் இதுவரை அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவி வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் நான் கொடுத்த பணத்தை கேட்டபோது தராமல் ஏமாற்றி வருகிறார். மேலும், எனது செல்போன் அழைப்புகளை சசிகுமார் எடுப்பதில்லை” என புகார் அளித்தார்.
இந்த புகார் போரூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து போரூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து சசிக்குமாரை தீவிரமாக தேடிவந்த நிலையில், அவரை சேலத்தில் வைத்து கைது செய்து விசாரித்தனர். அப்போது, பணத்தை வாங்கி ஏமாற்றிய சசிகுமார் போலீசாக பணிபுரிந்து மோசடி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து போலி ஐஏஎஸ் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார், அவரை கைது செய்ததோடு அவருக்கு உடந்தையாக இருந்த நடராஜன் என்பவரையும் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பணம் வாங்கி ஏமாற்றிய சசிகுமாரிடம் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments