தனது வீட்டில் வேலைசெய்த பழங்குடியின பெண்ணை கழிவறையை நாக்கால் சுத்தம் செய்யவைத்து சித்ரவதை செய்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஸ்வர் பாத்ராவின் மனைவி சீமா பாத்ரா. இவர் பாஜக பெண் அணியின் முக்கியப்பொறுப்பில் இருந்துவருகிறார். மேலும் மத்திய அரசின் ‘’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர் சுனிதா. பழங்குடியின பெண்ணான இவரை சீமா தொடர்ந்து அடித்தும், சூடான பொருட்களை வைத்து உடலில் பல்வேறு இடங்களில் சூடுவைத்து சித்ரவதை செய்துவந்துள்ளார். இதில் கொடூரத்தின் உச்சமாக தனது வீட்டு கழிவறையை சுனிதாவின் நாக்காலேயே சுத்தம் செய்ய வைத்திருக்கிறார் சீமா.
இதை கவனித்த சீமா பாத்ராவின் மகன் ஆயுஷ்மான் சுனிதாவை தனது தாயிடமிருந்து காப்பாற்ற எண்ணியிருக்கிறார். மாநில தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஆயுஷ்மான், தனது நண்பர் விவேக் பாஸ்கேவிடம் தனது வீட்டில் நடப்பவற்றை குறித்து தெரிவித்துள்ளார். சீமாவின் வீட்டிலிருந்து ஆயுஷ்மானின் உதவியுடன் சுனிதாவை மீட்ட விவேக் அவரிடம் விசாரித்ததில் அவர் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்திருக்கிறார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் SC-ST சட்டத்தின் பிரிவுகள், 1989-இன் கீழ் ராஞ்சியிலுள்ள அர்கோடா போலீசார் சீமாவின் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைதுசெய்ய முற்படுகையில் சீமா ராஞ்சியிலிருந்து சாலைமார்க்கமாக தப்பிச்செல்ல முயன்றிருக்கிறார். பல இடங்களில் தங்கள் தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசாருக்கு துப்பு கிடைத்ததன் பேரில், அவரை போலீசார் கைதுசெய்தனர்.
ஜார்கண்டில் சீமா பத்ரா தனது வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக தேசிய மகளிர் ஆணையம் (NCW) தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் உரிய முறையில் விசாரணை நடத்த ஆணையம் கடிதம் எழுதியுள்ளது என்று NCW தலைவர் ரேகா ஷர்மா ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். இதனிடையே சீமா பாத்ராவை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது பாஜக.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments