போக்சோ சட்டத்தின் விதிகள் மற்றும் அதன் மீதான தண்டனைகள் மிகவும் கடுமையானவை. விதிகள் கடுமையாக இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் அதிகரித்தே வருகின்றன என்பது உண்மைதான் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
2 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரம் அடைந்து, கடந்த 2015 ஆம் ஆண்டில் தனது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதன்பேரில் தேனி மாவட்ட அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது சுரேசுக்கு ஆயுள்தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும் சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தநிலையில் விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவரது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். தந்தையே தன் சொந்த குழந்தைக்கு எதிராக இப்படி ஒரு குற்றத்தை செய்திருக்கிறார் .குழந்தையை வளர்க்க பணம் அனுப்புவதால் மட்டும் மனுதாரர் மீதான தண்டனையை ரத்து செய்ய முடியாது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும், குற்றவாளியான சுரேஷை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினர்.
மேலும் பேசிய நீதிபதிகள், ”போக்சோ சட்டம், நமது குழந்தைகளை காப்பாற்றவும் அவர்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உறுதி செய்யவும் இயற்றப்பட்டது. போக்சோ சட்டத்தின் விதிகள் மற்றும் அதன் மீதான தண்டனைகள் மிகவும் கடுமையானவையாக இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான்” என்று வேதனை தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments