இங்கிலாந்து அணி பாகிஸ்தானை முதல்முறையாக 3-0 என்ற கணக்கில், அவர்களுடைய சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அபாரமான தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றி, முதல் முறையாக பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் இருவரும் ரெட் பால் அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் பொறுப்பேற்ற பின்னர் 10 போட்டிகளில், இங்கிலாந்து அணி தங்களது 9ஆவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. 7 டி20 போட்டிகளில் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி அசத்தியது.
வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்!
இந்நிலையில் எஞ்சியிருக்கும் கடைசி போட்டியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும், உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பிற்கான இறுதிபோட்டிக்கு உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. செவ்வாய்க்கிழமை கராச்சியில் தொடங்கப்பட்ட மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரை 3-0 என கைப்பற்றி, பாகிஸ்தானியர்களுக்கு அவர்களின் சொந்த மண்ணில் வரலாற்றில் முதல்முறையாக ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சியளித்துள்ளது.
பாபர் அசாம் ரன்அவுட்டால் பெரிய ஸ்கோரை தவறவிட்ட பாகிஸ்தான்!
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் கைக்கோர்த்த அசார் அலி மற்றும் பாபர் அசாம் உதவியால் மீண்டெழுந்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபர் அசாம் 78 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேற, பெரிய இலக்கை பாகிஸ்தான் நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான்.
ரெஹான் அகமது சுழலில் சிக்கிய பாகிஸ்தான்!
பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக் அடித்த சதத்தின் உதவியால் 354 ரன்கள் சேர்த்தது. 50 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னினங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து பவுலர் ரெஹான் அகமது சுழலில் 216 ரன்களுக்கு சுருண்டது. அற்புதமாக பந்துவீசிய ரெஹான் அகமது 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
மீண்டும் கைக்கொடுத்த ”பாஸ்பால்” அணுகுமுறை!
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 28 ஓவர்களிலேயே 170 ரன்கள் என்ற இலக்கை அடைந்து, முதல்முறையாக 3-0 என பாகிஸ்தான் அணியை அதன் சொந்தமண்ணில் ஒயிட்வாஷ் செய்து அபாரமான வெற்றியை பதிவுசெய்தது இங்கிலாந்து அணி.
இக்கட்டான நிலையில் பொறுப்பேற்ற மெக்கல்லம்- வெற்றிபெற்ற பாஸ்பால் அணுகுமுறை
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் 4-0 என்ற படுதோல்வியை அடைந்திருந்தது இங்கிலாந்து அணி. மேலும் 17 டெஸ்ட் போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த போது, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ப்ரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பொறுப்பேற்க, பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். மே மாதம் கைக்கோர்த்த இந்த கூட்டணி அவர்களுடைய 10 போட்டிகளில் 9 போட்டிகளை வென்று அசத்தியுள்ளது.
சொந்த மண்ணில் பாகிஸ்தான் வரலாற்று தொல்வி!
முதல் முறையாக ஒரு அணி பாகிஸ்தான் அணியை அதன் சொந்தமண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. முன்னதாக டெஸ்ட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று, இதற்கு முன்னர் எந்த அணியும் பெறாத வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து. இந்நிலையில் தற்போது 3 போட்டிகளையும் வென்று 3-0 என வரலாற்றில் முதல்முறையாக ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து.
இதன் மூலம் மார்ச் மாதம் லாகூரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது 3 போட்டிகளில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது இதுவே முதல் முறையாகும்.
புதிய சாதனையை படைத்த இங்கிலாந்து பவுலர் ரெஹான் அகமது!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை ரெஹான் அகமது படைத்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அப்போது அவருக்கு 18 வயது 193 நாட்கள் என்ற நிலையில், கம்மின்ஸ் அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரெஹான் அகமது 18 வயது மற்றும் 126 நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது. இதன்மூலம் கடந்த 11 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை முறியடித்துள்ளார் ரெஹான்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/WSI7x9K
via IFTTT
0 Comments