கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சி.பி.ஐ. அதிகாரி எனக் கூறி, வேலை வாங்கித் தருவதாக இளம் பெண்ணிடம் பணம் மற்றும் நகை திருடி சென்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலராமன்புதூரைச் சேர்ந்தவர் அழகேஷ்வரன். இவரது மனைவி உதிராதேவி (32). இவருடைய மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், தன்னை சி.பி.ஐ. அதிகாரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். பலருக்கும் வேலை வாங்கி கொடுத்து இருப்பதாக அந்த நபர் கூறியதை நம்பிய உதிராதேவி, தனக்கும் வேலை வாங்கி தருமாறு அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பல லட்சம் ரூபாய் ஆகுமென்றும், முதற்கட்டமாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய உதிராதேவி உடனடியாக போன் பே மூலம் அந்த நபருக்கு ரூ.60 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பிறகு உதிராதேவியின் வீட்டுக்கு வேலை தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி என்று கூறி, தேவியிடம் சான்றிதழ்கள் வாங்கி சரிபார்த்துவிட்டு, வேலை தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். பின்னர் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றும், எனவே கழுத்தில் அணிந்துள்ள நகையை கழற்றி வையுங்கள் என்று அந்த இளைஞர் கூறி இருக்கிறார்.
இதையடுத்து உதிரா தேவி தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி அங்குள்ள நாற்காலியில் வைத்துள்ளார். அப்போது தனக்கு தாகம் எடுப்பதாகவும், தண்ணீர் கொண்டு வரும்படியும் அந்த இளைஞர் கூறியதும், உதிரா தேவி சமையல் அறைக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து பார்த்தபோது, உதிராதேவியின் நகை மற்றும் செல்ஃபோன் ஆகியவற்றை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து ரூ. 60 ரூபாய் ஆயிரம் மோசடி செய்ததோடு, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்ஃபோனை வீட்டில் வந்தே இளைஞர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்தச்சம்பவம் குறித்து நேசமணிநகர் காவல் நிலையத்தில் தேவி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வேலூர் சந்திரம்புதூர் பகுதியை சேர்ந்த அன்பு குமாரை( 27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments