கடந்த 2021-ஆம் ஆண்டில் நாட்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 'இந்தியாவின் சாலை விபத்துகள் -2021' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், நாட்டில் 2021ஆம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதில் 1,53,972 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2019 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்கள் 8.1 சதவிகிதமாகவும், காயங்கள் 14.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2020இல் நாட்டில் நிகழ்ந்துள்ள சாலை விபத்துக்கள், இறப்புகள் மற்றும் காயங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விபத்துக்கள் குறைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் ஹெல்மெட் அணியாததால் 93,763 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் 39,231 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக நாட்டில் ஒவ்வொரு நாளும் 1,130 விபத்துக்கள் மற்றும் 422 இறப்புகள் பதிவாகிறது. அதுபோல ஒவ்வொரு மணிநேரமும் 47 விபத்துக்கள் மற்றும் 18 இறப்புகளும் பதிவாகின்றன. 2021-ம் ஆண்டில் 18-45 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் 67.6 சதவிகிதமாக உள்ளனர். அதே நேரத்தில் 18-60 வயதுடையவர்கள் மொத்த சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 84.5 சதவிகிதமாக உள்ளனர். 2021-ம் ஆண்டில், நாட்டில் பதிவான 4,12,432 விபத்துகளில், 1,28,825 விபத்துகள் (31.2 சதவீதம்) தேசிய நெடுஞ்சாலைகளில், 96,382 விபத்துகள் (23.4 சதவீதம்) மாநில நெடுஞ்சாலைகளிலும், மற்ற சாலைகளில் 1,87,225 விபத்துகளும் (45.4 சதவீதம்) நடந்துள்ளன.
ஆசியா பசிபிக் சாலை விபத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வழங்கிய தரவுகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் சாலைகளில் உயிரிழக்கும் பத்தில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/dMUVYyD
via IFTTT
0 Comments