சல்மான் கான், சுந்தர் பிச்சை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ட்விட்டர் தகவல்கள் திருட்டு?

LATEST NEWS

500/recent/ticker-posts

சல்மான் கான், சுந்தர் பிச்சை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ட்விட்டர் தகவல்கள் திருட்டு?

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஹேக்கர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல், டிஜிட்டல் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும். ஊழியர்களை நீக்கியது, பிரபலங்களின் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் என்று அவரது பல முடிவுகள் விமர்சனத்தையே சந்தித்து வருகிறது. இதனால் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது புதிய பிரச்சனை ஒன்று உருவெடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு ட்விட்டரில் இருந்து 54 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில், தற்போது கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகன் ஜீனியர் டொனால்ட் ட்ரம்ப், நாசா, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, உலக சுகாதார நிறுவனத்தின சமூகவலைத்தளம் உள்ளிட்ட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், அதாவது டிவிட்டர் கணக்கு வைத்திருப்போரின் இ-மெயில், பெயர், பயனர் பெயர், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, கணக்கு உருவாக்கிய தேதி, பயனர்களின் செல்ஃபோன் எண் ஆகியவை டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஹேக்கர், 1000 பயனர்களின் தரவுகளை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

இதனை இஸ்ரேல் நாட்டு சைபர் கிரைம் உளவுத் துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கேலினும் உறுதிப்படுத்தியுள்ளார். ஏபிஐ குறைபாடு காரணமாக பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் சேகரித்திருக்கலாம் என ஹட்சன் ராக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹட்சன் ராக், டார்க் வெப்பில் உள்ள ஹேக்கரின் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளது.

அதில், “ட்விட்டர் அல்லது எலான் மஸ்க், நீங்கள் இதனைப் படித்துக்கொண்டிருக்கும்போது, 54 லட்சம் தகவல் திருட்டில் ஏற்கனவே உங்களுக்கு (எலான் மஸ்க்) அபராதம் விதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், 40 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டிற்கான அபராதத்தை சேர்த்து எண்ணிப் பாருங்கள். ஃபேஸ்புக்கில் 53 கோடி பேரின் தகவல் திருடுப் போனதற்காக மெட்டா நிறுவனம் பல ஆயிரம் கோடி அபராதம் செலுத்தி இருக்கிறது. அதுபோன்று நடக்காமல் இருக்க இடைத்தரகர் மூலம் இந்தத் தரவை பிரத்தியேகமாக வாங்குவதே நல்லது.

இடைத்தரகர் மூலம் தன்னை அணுகினால் தன்னிடம் உள்ள பயனர் தரவுகள் சைபர் குற்றவாளிகளிடம் செல்லாமல் தவிர்க்கலாம். இல்லையெனில், உங்கள் நிறுவனம் மீதான நம்பகத்தன்மையை அடியோடு அழித்து விடும். இதனால் இடைத்தரகர் மூலம் ஒப்பந்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று ஹேக்கர் பேரம் பேச அழைப்பு விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments