வில்லுகுறி அருகே சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துகுடி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தனது மனைவி மற்றும் 11 வயது மகள் மற்றும் மகனுடன் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி அருகே உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அப்போது இவரது 11 வயது மகள் அந்த பகுதியில் உள்ள கடைக்கு தனது தம்பியுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது குடி போதையில் எதிரே வந்த அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் இளைஞர், சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியும் அவரது தம்பியும் அலறி சத்தம் போட்டதை அடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டதோடு தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை பிடித்து இரணியல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments