'3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்த ரோகித் சர்மா' என்று வெளியிடப்பட்ட செய்திக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் இந்திய வீரர் அஸ்வின்.
அண்மையில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா (101 ரன்கள்), சுப்மன் கில் (112 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளாசிய 30-வது சதம் இதுவாகும்.
2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும் என்று அப்போட்டியை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனம் அடிக்கோடிட்டு குறிப்பிட்டது. இதையடுத்து, இந்தப் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ''நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அடித்த முதல் சதம் இதுவாகும் என்று ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நான் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமே 12 ஒருநாள் போட்டியில் தான் விளையாடி இருக்கிறேன். நீங்கள் 3 ஆண்டுகள் என்று பெரிதாக சொல்வது மிகவும் அதிக காலம் போல் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒளிபரப்பு நிறுவனம் புள்ளி விவரங்களை சரியான பார்வையில் கொடுக்க வேண்டும்'' என்று கூறினார்.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் ரோகித்துக்கு ஆதரவாகப் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், ஒளிபரப்பு நிறுவனங்கள் புள்ளி விபரங்கள் தொடர்பான விஷயங்களை மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், ''3 வருடங்களுக்குப் பின்.. 4 வருடங்களுக்குப் பின்... என நீங்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
தீவிர ரசிகர்கள், அணி தேர்வாளர்கள் மற்றும் அமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றவர்களுக்கு யாதார்த்தம் என்னவென்பது தெரியும். நீங்கள் ஒரு சாமானியரின் கண்ணோட்டத்தில் தகவலை வெளியிடுகிறீர்கள். அத்தகைய தகவல்களை கேட்கும்போது சராசரி ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? 'ஆம், அவர் ரன் அடிக்கவில்லை; அவரை நீக்குங்கள்' என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 8 போட்டிகளில் பங்கேற்ற ரோகித் சர்மா, 5 சதங்களை விளாசி, ஒரு உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த 10-15 ஆண்டுகளில் வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் செயல்திறனைக் கேள்விக்குட்படுத்த எதுவும் இல்லை'' என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MyCknXi
via IFTTT
0 Comments