தென்காசி அருகே வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் பெண் வீட்டார் கணவன் கண்முன்னே புதுமணப்பெண்ணை தூக்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியதை தொடர்ந்து, பெண்ணின் தந்தை உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கொட்டா குளம் பகுதியை சேர்ந்த வினித் என்பவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த நவீன் என்பவரின் மகள் கிருத்திகாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே பள்ளியில் பயின்ற போது காதலித்து வந்துள்ளனர். சுமார் 6 வருடம் காதலித்ததாக கூறப்படுகிறது. கல்லூரி கல்வி சென்ற ஆண்டில் முடிந்த நிலையில், வினித் சென்னையில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 26.12.23 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கன்னியாகுமாரியில் 27 ம் தேதியன்று நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் முன்னிலையில் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெண் வீட்டார், `மகளை காணவில்லை’ என புகார் அளித்ததால், கடந்த 04.01.23 அன்று கிருத்திகாவிடம் குற்றாலம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்துள்ளது. அப்போது கிருத்திகா, கணவனுடனே செல்வேன் என கூறியதால் `இனி மகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை’ எனக் கூறி அவரது குடும்பத்தினர் அங்கிருந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணமகன் பெண் வீட்டாரால் அச்சுறுத்தல் இருப்பதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார் வினித். அதன் அடிப்படையில் நேற்று விசாரணைக்கு காவல் நிலையம் வந்துள்ளனர்.
வினித் வீட்டாரும், வினித் - கிருத்திகாவும் நீண்ட நேரம் காவல் நிலையத்தில் காத்திருந்துள்ளனர். கிருத்திகா வீட்டார் வெகுநேரமாக வராததால், அவர்கள் உணவருந்திவிட்டு வரும்படி காவல்நிலையத்தில் இருந்தவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி அவர்கள் சென்றபோது, குத்துக்கல் வலசை அருகே காரில் சென்ற போது காரை வழிமறித்து கிருத்திகாவை கடத்த முயற்சித்துள்ளனர் சிலர். கிருத்திகா, அருகே உள்ள ஷாமில்லுக்குள் ஓடி உள்ளார். அங்கு சென்று அவரது குடும்பத்தினர், அவரை தரதரவென தூக்கி சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. இதற்கிடையே, வினித்தும் `தன் மனைவியை அவரது குடும்பத்தினர் வாகனத்தை மறித்து தன்னை தாக்கி கடத்தி சென்றுவிட்டனர்’ எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் மணமகளின் தந்தை நவீன் உட்பட ஏழு பேர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வினித் கூறியபோது, “நாங்கள் கோர்ட் மூலம் திருமண ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வாழ சென்றோம். ஆனால் பொங்கலுக்கு முன் தினம் கிருத்திகா வீட்டார், எங்களை கடத்த திட்டமிட்டதால் அப்போது புகார் செய்தோம். எப்படியோ அன்று தப்பிவிட்டோம். இப்போது புத்தம் புதிய பதிவெண் இல்லாத காரில் கிருத்திகாவின் தந்தையுடன் வந்தவர்கள், அவரை கடத்தி சென்று விட்டனர். என் மனைவியை மீட்டு தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments